கொட்டாம்பட்டி பகுதிகளில் பருவமழை தாமதத்தால் ஆடிப்பட்டம் சாகுபடியில் ஆர்வம் காட்டாத விவசாயிகள்

கொட்டாம்பட்டி பகுதிகளில் பருவமழை தாமதத்தால் ஆடிப்பட்டம் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டாத நிலை உள்ளது.;

Update: 2023-08-05 21:20 GMT

கொட்டாம்பட்டி,

கொட்டாம்பட்டி பகுதிகளில் பருவமழை தாமதத்தால் ஆடிப்பட்டம் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டாத நிலை உள்ளது.

பருவமழை

மதுரை மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கொட்டாம்பட்டி 5 மாவட்டங்களின் இணைப்பு பகுதியில் அமைந்துள்ளது. கொட்டாம்பட்டி பகுதிகளில் பெரும்பாலான கிராமங்கள் பருவமழையை நம்பியே விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முழுக்க முழுக்க வானம் பார்த்த பகுதியாகவும் பருவ மழையால் கண்மாய், குளம், கிணறு நீர்நிலைகளில் தண்ணீரை சேமித்து இப்பகுதி விவசாயிகள் விவசாயம் பார்த்து வருகின்றனர்.

இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொழிந்து விவசாயம் முழுமை அடைந்து வந்தது. கடந்த ஆண்டு இரண்டு போகம் நிலக்கடலை சாகுபடி செய்தனர்.

வானம் பார்த்த பகுதியாக இப்பகுதி உள்ளதால் வறட்சியை தாங்கி விளையும் எண்ணெய் வித்துப் பயிர்களான நிலக்கடலை, கேழ்வரகு, தட்டப்பயறு, மொச்சை உள்ளிட்ட பயறு வகைகளை ஆடி மாதத்தில் ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழிக்கு ஏற்ப இப்பகுதி விவசாயிகள் ஆடி மாதத்தில் பயிர் வகைகளை விதைப்பது வழக்கம். மேலும் ஆழ்துளை கிணறு வைத்திருக்கும் விவசாயிகள் நெல் விவசாயம் செய்வது வழக்கமாக உள்ளது.

விவசாய பணி தாமதம்

கொட்டாம்பட்டி பகுதியில் இன்றளவும் பழமை மாறாமல் விவசாயிகள் தங்களது நிலங்களில் பெரும்பான்மையானோர் மாடுகளை வைத்து கலப்பை ஏர்பூட்டி நிலத்தை உழுது அதன் பின்பு பயறு வகைகளை பயிரிடுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். ஆனால் இந்தாண்டு ஆடி மாதம் பிறந்ததிலிருந்தே போதிய பருவமழை கை கொடுக்காததால் விவசாயிகள் பலர் ஆடி விதைப்பு பணியில் தீவிரம் காட்டாமல் உள்ளனர். மேலும் ஒரு சில விவசாயிகள் நிலக்கடலை பயிரை பயிரிட்ட நிலையில் மழை பொழிவு இல்லாததால் கருகும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் கொட்டாம்பட்டி பகுதியில் உள்ள விவசாயிகள் பருவமழையை எதிர்பார்த்து விவசாய பணிக்காக காத்திருக்கின்றனர்.

ஆடிப்பட்டம் விதைப்பு தொடர்பாக கொட்டாம்பட்டி வேளாண் துறை அலுவலரிடம் கேட்டபோது, பருவ மழை கை கொடுக்காத காரணத்தால் விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை. கடந்தாண்டு ஆடி மாதத்தில் மட்டும் 3 டன் முதல் 5 டன் வரை விதைநெல்கள் விவசாயிகளுக்கு விற்பனையானதாகவும், ஆனால் இந்த ஆண்டு தற்போது வரை 50 கிலோ மட்டுமே விற்பனை ஆகியுள்ளது எனவும் தெரிவித்தார். மேலும் விவசாயிகள் எந்த நேரமும் விவசாய சம்பந்தமான தொடர்புக்கு தங்களது அலுவலகத்தை அணுகலாம் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்