சேமிப்பு கிடங்கை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள அழைப்பு
அரியலூர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் உள்ள சேமிப்பு கிடங்கை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.;
தமிழக அரசின் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை கீழ் செயல்படும் பெரம்பலூர் விற்பனை குழுவிற்குட்பட்ட அரியலூர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் தினந்தோறும் விவசாயிகள் கொண்டு வரும் விளைபொருட்களை மறைமுக ஏல முறையில் போட்டி விலையில் தரகு, கமிஷன், இடைத்தரகர்கள் இன்றி நல்ல விலைக்கு விற்பனை செய்து தரப்படுகிறது. மேலும் விவசாயிகள் கொண்டு வரும் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காத பட்சத்தில் தங்களது விளைப்பொருட்களை கிட்டங்கிகளில் (சேமிப்பு கிடங்கு) இருப்பு வைத்து விற்பனை செய்வதற்கு ஏதுவாக கிட்டங்கி வசதி (நாள் ஒன்றுக்கு குவிண்டாலுக்கு வாடகை 10 பைசா) ஏற்படுத்தப்பட்டு உள்ளது. விருப்பத்தின்பேரில் பொருளீட்டுக்கடனாக விவசாயிகளுக்கு விளைபொருளின் மதிப்பில் 50 சதவீதம், அதிகபட்சமாக ரூ.3 லட்சம் வரை 5 சதவீத வட்டி வீதத்தில் (முதல் 15 தினங்களுக்கு வட்டி இல்லை) வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பழங்கள் மற்றும் காய்கனிகளை சேமித்து பயன்பெற ஏதுவாக 25 மெட்ரிக் டன் குளிர்பதன கிட்டங்கி அரியலூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் செயல்பட்டு வருகிறது. மேற்கண்ட வசதிகளை விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பயன்படுத்திக்கொள்ளலாம் என பெரம்பலூர் விற்பனைக்குழு செயலாளர் சுரேஷ்பாபு தெரிவித்துள்ளார்.