பூண்டு பயிரிடும் பணியில் விவசாயிகள் மும்முரம்

கோத்தகிரி பகுதியில் பூண்டு பயிரிடும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2023-01-11 18:45 GMT

கோத்தகிரி, 

கோத்தகிரி பகுதியில் பூண்டு பயிரிடும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மலை காய்கறிகள்

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை சாகுபடிக்கு அடுத்த படியாக மலை காய்கறிகள் விவசாயம் பிரதானமாக உள்ளது. கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், காலிபிளவர், முள்ளங்கி, நூல்கோல், பீன்ஸ், பூண்டு உள்ளிட்ட மலை காய்கறிகளை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.

நீலகிரியில் விளையும் வெள்ளைப் பூண்டு அதிக காரத்தன்மை, மருத்துவ குணம் கொண்டது. கோத்தகிரி சுற்று வட்டார பகுதிகளான கட்டபெட்டு, பனஹட்டி, பில்லிக்கம்பை, கக்குச்சி, மிளிதேன் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் முதல் போக விவசாயமாக மருத்துவ குணம் கொண்ட நீலகிரி பூண்டை மும்முரமாக பயிரிட்டு வருகின்றனர்.

பூண்டு பயிரிடும் விவசாயிகள்

இது குறித்து பூண்டு பயிரிட்டுள்ள கேத்தி பாலாடாவை சேர்ந்த விவசாயி சிவகுமார் கூறியதாவது:- முதல் போகத்தில் அறுவடை செய்யப்படும் நீலகிரி பூண்டு சமையல் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. 2-ம் போகத்தில் அறுவடை செய்யும் பூண்டு விதைக்காக பயன்படுத்தப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் பூண்டு கிலோவுக்கு ரூ.30 மட்டுமே விலை கிடைத்தது.

இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது. மேலும் தொடர் மழை பெய்ததால், நிலத்தை டிராக்டர் மூலம் உழவு செய்ய முடியவில்லை. தற்போது நிலத்தை பதப்படுத்தி, ஸ்ப்ரிங்ளர் மூலம் தண்ணீர் பாய்ச்சி மண்ணை இலகுவாக்கி, பூண்டு விதைகளை நடவு செய்து வருகிறோம்.

கொள்முதல் விலை

பூண்டு முதல் போகம் அறுவடை செய்ய 100 நாட்கள் தேவைப்படும். 2-ம் போகம் 90 நாட்களில் அறுவடைக்கு தயாராகி விடும். ஒரு கிலோ விதை பூண்டு ரூ.250 ஆகிறது. ஒரு ஏக்கருக்கு பூண்டு பயிரிட 750 கிலோ விதைகள் தேவை. ஒரு ஏக்கரில் பூண்டு பயிரிட்டால் குறைந்தபட்சம் 500 கிலோ முதல் 600 கிலோ வரை கிடைக்கும்.

நீலகிரி மாவட்டத்தில் பூண்டு விதைகளை பாதுகாப்பாக வைக்கவும், அறுவடை செய்த பூண்டை அதிக விலை கிடைக்கும் வரை பாதுகாக்கவும் வசதி ஏதும் இல்லை. எனவே, தோட்டக்கலை வணிக வேளாண்மை துறையின் சார்பில் கிடங்கு அமைக்கவும், பூண்டுக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலை நிர்ணயிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.  

Tags:    

மேலும் செய்திகள்