விவசாய நிலத்தில் சாலை அமைக்ககோரிநல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் விவசாயிகள் தர்ணா

Update: 2023-07-06 19:00 GMT

நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி அருகே சாமிசெட்டிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கமலநத்தம் கிராமத்தில் ஏராளமான ஏக்கரில் விளை நிலங்கள் உள்ளன. இங்கு அப்பகுதி விவசாயிகள் விளைவிக்கும் வெண்டை, தக்காளி, கத்திரிக்காய் உள்ளிட்டவற்றை வாகனங்களில் கொண்டு செல்ல ஏதுவாக விவசாய நிலத்துக்கு இடையே சாலை அமைக்க கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் பெயருக்கு பத்திரப்பதிவு செய்து நிலத்தை அப்பகுதி விவசாயிகள் தானமாக வழங்கினர். ஆனால் இதுவரை சம்பந்தப்பட்ட துறையை சேர்ந்த அலுவலர்கள், சாலைக்காக தானமாக வழங்கிய நிலத்தை அளவீடு செய்து சாலை அமைக்காமல் கிடப்பில் போட்டதாக கூறப்படுகிறது. மேலும் அப்பகுதியை சேர்ந்த சிலர் தானமாக வழங்கிய நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து வருவதாக தெரிகிறது.

இதையொட்டி நிலத்தை மீட்டு, சாலை அமைக்ககோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லையாம். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி விவசாயிகள் தானமாக வழங்கிய நிலத்தில் சாலை அமைக்ககோரி நேற்று நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து அங்கு சென்ற அதியமான்கோட்டை போலீசார், அதிகாரிகள் தர்ணாவில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர், சுமார் ஒரு மணி நேர பேச்சுவார்த்தைக்கு பின் கோரிக்கை குறித்து விரைவில் நடவடிக்கை எடுப்பதுடன், தானமாக வழங்கிய நிலத்தை அளவீடு செய்து சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அலுவலகம் வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது,

Tags:    

மேலும் செய்திகள்