மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடியமாட்டை காப்பாற்ற முயன்ற விவசாயி பலி

மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய மாட்டை காப்பாற்ற முயன்ற விவசாயியும் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

Update: 2022-12-23 18:45 GMT

மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய மாட்டை காப்பாற்ற முயன்ற விவசாயியும் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

விவசாயி

மதுரை மாவட்டம் கருப்பாயூரணி அருகே வரிச்சியூர் களிமங்கலம் மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர், கருப்புசாமி (வயது 61). விவசாயி. நேற்று காலை தனது நிலத்தில் விதை போடுவதற்காக கருப்புசாமி உள்ளிட்ட சிலர் அங்கு சென்றனர். அப்போது, அவர்களுக்கு சொந்தமான பசுமாட்டையும் மேய்ச்சலுக்காக அழைத்து சென்றுள்ளனர். பசுமாடானது, அருகில் உள்ள வயல்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்தது.

மின்சாரம் தாக்கி சாவு

சிறிது நேரத்தில், அந்த பசுமாடானது அலறி உயிருக்கு போராடியது. இதனை தூரத்தில் இருந்து பார்த்த கருப்புசாமி, பசுமாட்டை ஏதோ விஷப்பூச்சி கடித்து விட்டது என்றும், அதனால் அலறுகிறது என நினைத்து அதனை காப்பாற்ற சென்றுள்ளார். பின்னர் அவரும் பசுமாட்டின் அருகே துடிதுடித்து மயங்கினார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் அருகில்சென்று பார்த்தபோது, அந்த பகுதியில் இருந்த மின்கம்பத்தில் இருந்து மின்கம்பி அறுந்து கிடந்தது தெரியவந்தது.

அறுந்து கிடந்த மின்கம்பியை பசுமாடு மிதித்ததால், அதனை காப்பாற்ற முயன்ற, கருப்புசாமி மீதும் மின்சாரம் பாய்ந்தது தெரியவந்தது. இ்ந்த சோக சம்பவத்தில் கருப்புசாமி உயிரிழந்தார். பசுமாடும் இறந்தது.

விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த கருப்பாயூரணி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, கருப்புசாமியின் உடலை மீட்டு பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்