கார் மோதி விவசாயி பலி

திருச்சி-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில், அய்யலூரை அடுத்த கடவூர் பிரிவு அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியத்தில் சிகிச்சை பலனின்றி விவசாயி பலியானார்.

Update: 2023-06-17 19:30 GMT

திண்டுக்கல் எம்.வி.எம். நகரை சேர்ந்தவர் பரமேஸ்வரன் (வயது 60). இவர், அதே பகுதியில் விதை நிறுவனம் நடத்தி வருகிறார். இவர், தனது காரில் தலைவாசல் சென்றுவிட்டு திண்டுக்கல் நோக்கி வந்து கொண்டிருந்தார். நேற்று முன்தினம் இரவு திருச்சி-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில், அய்யலூரை அடுத்த கடவூர் பிரிவு அருகே கார் சென்று கொண்டிருந்தது.

அப்போது எதிர்திசையில் அய்யலூர் செங்குளத்துப்பட்டியை சேர்ந்த முருகன் (45), தனது உறவினரான பாலத்தோட்டத்தை சேர்ந்த விவசாயி ஆண்டி (55) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட முருகன், ஆண்டி ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் மேல் சிகிச்சைக்காக ஆண்டி மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அங்கமுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்