மின்சாரம் தாக்கி விவசாயி பலி; 8 ஆடுகளும் செத்தன
சமயபுரம் அருகே கொட்டகைக்கு மின்விளக்கு அமைத்தபோது, மின்சாரம் தாக்கி விவசாயி பலியானார். மேலும் 8 ஆடுகளும் செத்தன.
சமயபுரம் அருகே கொட்டகைக்கு மின்விளக்கு அமைத்தபோது, மின்சாரம் தாக்கி விவசாயி பலியானார். மேலும் 8 ஆடுகளும் செத்தன.
விவசாயி
திருச்சி மாவட்டம் சமயபுரத்தை அடுத்த சிறுகனூர் அருகே உள்ள கொணலை கீழத்தெருவை சேர்ந்தவர் சவரிமுத்து (வயது 52). விவசாயியான இவருக்கு அமுதாமேரி என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.
சவரிமுத்து அப்பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கடன் பெற்று 30-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வந்தார். தினமும் அவர் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றுவிட்டு, இரவானதும் வீட்டிலிருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆவாரவல்லி என்ற இடத்தில் தனக்கு சொந்தமான கொட்டகையில் ஆடுகளை அடைத்து செல்வது வழக்கம்.
மின்சாரம் பாய்ந்தது
மேலும் சவரிமுத்து ஆடுகளின் பாதுகாப்புக்காக அங்கேயே தூங்கிவிடுவார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆடுகளை கொட்டகையில் அடைத்து விட்டு கொட்டகைக்கு மின்விளக்கு பொருத்துவதற்காக அருகில் உள்ள தனது சகோதரர் தோட்டத்தில் உள்ள மின் மோட்டார் அறையில் உள்ள சுவிட்ச் போர்டில் இருந்து மின் ஒயரை கட்டினார்.
அப்போது, அவர் மின் ஒயரை சரியாக கட்டாமல் மின் இணைப்பு வழங்கியதால் எதிர்பாராதவிதமாக மின் ஒயர் அறுந்து ஆடுகள் மீது விழுந்து மின்சாரம் பாய்ந்தன. இந்த சம்பவத்தில் 8 ஆடுகள் சம்பவ இடத்திலேயே செத்தன. இதை கண்ட சவரிமுத்து அதிர்ச்சி அடைந்து மின்ஒயரை கையால் தூக்கிப் போட முயற்சித்துள்ளார். இதைத்தொடர்ந்து அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் சவரிமுத்து சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக இறந்தார். இதை கண்ட அப்பகுதியினர் உடனடியாக சிறுகனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சோகத்தில் கிராம மக்கள்
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மின் இணைப்பை துண்டித்தனர். பின்னர் சவரிமுத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த கால்நடை மருத்துவர் உயிரிழந்த ஆடுகளை உடற்கூராய்வு செய்தார். உயிரிழந்த சவரிமுத்துவின் உடலை பார்த்து அவரது மனைவி மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பார்ப்போரின் கண்களை கலங்க செய்தது. மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் அந்த கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக சிறுகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.