வயலில் மின்சாரம் தாக்கி விவசாயி பலி
தஞ்சை அருகே வயலில் மின்சாரம் தாக்கி விவசாயி பலியானார்.
வல்லம்:
தஞ்சை அருகே களிமேடு பரிசுத்தம் நகர் பகுதியை சேர்ந்தவர் இளங்கோ (வயது56). நெல் கொள்முதல் நிலையத்தில் பணியாற்றி வந்த இவர் தஞ்சை அருகே பல்லேரி பகுதியில் உள்ள தனது வயலில் கத்தரிக்காய் சாகுபடியும் செய்து இருந்தார். இளங்கோ பணி முடித்து தினமும் வயலுக்குச் சென்று கத்திரிக்காய் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவது உள்ளிட்ட பணிகளை செய்வது வழக்கம்.நேற்று முன்தினம் வயலுக்குச் சென்ற இளங்கோ அங்கு மின் கம்பி அறுந்து கிடப்பது தெரியாமல் அதன் மீது கையை வைத்து விட்டார். இதில் மின்சாரம் தாக்கி இளங்கோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இது குறித்து தகவல் அறிந்த கள்ளப்பெரம்பூர் போலீசாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இளங்கோ உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.