டி.என்.பாளையத்தில் மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்பு
டி.என்.பாளையத்தில் மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழந்தாா்.
டி.என்.பாளையம்:
டி.என்.பாளையம் வாய்க்கால் தோட்டத்தை சேர்ந்தவர் ராமசாமி. அவருடைய மகன் சிதம்பரநாதன் (வயது42). திருமணம் ஆகாதவர். தனியாக வசித்து வந்தார். சற்று மனநிலை பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்தார்.
விவசாயியான சிதம்பரநாதன் அவ்வப்போது பழைய ரேடியோ உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களை பழுது பார்ப்பார். அதேபோல் நேற்று அவர் வீட்டில் பழைய ரேடியோ ஒன்றை பழுது பார்த்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டார்.
இதனால் அவர் அலறினார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று மின்இணைப்பை துண்டித்தனர். அதற்குள் சிதம்பரநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றி அறிந்ததும் பங்களாப்புதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிதம்பரநாதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.