மின்வேலியில் சிக்கி விவசாயி பலி; காப்பாற்ற முயன்ற மனைவியும் உயிரிழந்த பரிதாபம்
வாசுதேவநல்லூர் அருகே மின்வேலியில் சிக்கி விவசாயி பலியானார். அவரை காப்பாற்ற முயன்ற மனைவியும் பரிதாபமாக இறந்தார்.;
வாசுதேவநல்லூர்:
வாசுதேவநல்லூர் அருகே மின்வேலியில் சிக்கி விவசாயி பலியானார். அவரை காப்பாற்ற முயன்ற மனைவியும் பரிதாபமாக இறந்தார்.
விவசாய தம்பதி
தென்காசி மாவட்டம் மேலப்பாவூர் குலசேகரப்பட்டி பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகன் (வயது 55). இவருடைய மனைவி வேலம்மாள் (45). விவசாயிகளான இவர்கள் இருவரும் புன்னையாபுரம் பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வந்தனர்.
இவர்கள் கடந்த 2 வருடமாக சிந்தாமணி ஊரைச் சேர்ந்த அன்னமணி என்பவரது வயலை கட்டு குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தனர். அந்த வயல் வாசுதேவநல்லூர் அருகே உள்ள சுப்பிரமணியபுரம் கிராமத்துக்கு மேற்கே ராமர் கோவில் அருகே ராசிங்கப்பேரி குளத்து பகுதியில் உள்ளது.
மின்வேலியில் சிக்கி...
நேற்று முன்தினம் முருகனும், அவருடைய மனைவி வேலம்மாளும் வயலுக்கு சென்றனர். அங்கு பயிரிடப்பட்டுள்ள கத்தரிக்கு முருகன் மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டார்.
அப்போது காட்டுப்பன்றிக்கு அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் எதிர்பாராதவிதமாக அவர் மிதித்தார். இதில் அவரை மின்சாரம் தாக்கியது. உடனே அவரை வேலம்மாள் காப்பாற்ற முயன்றார். அவரையும் மின்சாரம் தாக்கியது. சிறிது நேரத்தில் இருவரும் பரிதாபமாக இறந்தனர்.
சோகம்
இதுகுறித்து தகவல் அறிந்ததும் வாசுதேவநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இறந்த தம்பதியின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின்வேலியில் சிக்கி விவசாயியும், அவரது மனைவியும் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.