கார் மோதி விவசாயி படுகாயம்
சாலையை கடந்தபோது கார் மோதியதில் விவசாயி படுகாயமடைந்தார்.
ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தேவச்சின்னாம்பட்டியை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 60). விவசாயி. நேற்று மதியம் இவர், கேதையுறும்பு கிராமத்துக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து தனது ஊருக்கு மொபட்டில் அவர் திரும்பி கொண்டிருந்தார். வேடசந்தூர்-ஒட்டன்சத்திரம் சாலையில், தேவச்சின்னாம்பட்டி பிரிவில் அவர் சாலையை கடக்க முயன்றார்.
அப்போது பின்னால் வேடசந்தூரில் இருந்து ஒட்டன்சத்திரம் நோக்கி வந்த கார், எதிர்பாராத விதமாக மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தங்கவேல் படுகாயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக, ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தங்கவேலுவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.