மினி லாரி மோதி விவசாயி சாவு

கிருஷ்ணகிரி அருகே மினி லாரி மோதி விவசாயி இறந்த நிலையில், தந்தையின் இறுதி சடங்கில் பங்கேற்க வந்த மகளும் விபத்தில் சிக்கி பலியானார்.

Update: 2022-12-25 18:45 GMT

கிருஷ்ணகிரி அருகே மினி லாரி மோதி விவசாயி இறந்த நிலையில், தந்தையின் இறுதி சடங்கில் பங்கேற்க வந்த மகளும் விபத்தில் சிக்கி பலியானார்.

விவசாயி

கிருஷ்ணகிரி அருகே உள்ள பெரியபனமூட்லு கிராமத்தை சேர்ந்தவர் திம்மராயன் (வயது 55). விவசாயி. இவரது மனைவி ராணி. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இவரது மகள் சவுந்தர்யா (23). இவருக்கும், சோக்காடி கிராமத்தை சேர்ந்த முல்லையரசு என்பவருக்கும் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 1½ வயது மகன் உள்ளான். இவர்கள் சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை திம்மராயன், பெரியபனமூட்லு பஸ் நிறுத்தம் அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது, அந்த வழியாக கோழி பாரம் ஏற்றி வந்த மினி லாரி திம்மராயன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆட்டோ விபத்து

இதற்கிடையே தந்தையின் இறுதி சடங்கில் பங்கேற்க சென்னையில் இருந்து நேற்று அதிகாலை சவுந்தர்யா, அவரது கணவர் முல்லையரசு, குழந்தையுடன் கிருஷ்ணகிரிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் 3 பேரும் ஆட்டோவில் பெரிய பனமூட்லு கிராமத்துக்கு சென்றனர். ஆட்டோவை ஜெகதேவியை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் ஓட்டிச் சென்றார். வேட்டியம்பட்டி அருகே சென்ற போது அந்த வழியாக சென்ற பஸ், எதிர்பாரதவிதமாக ஆட்டோ மீது மோதியது.

இந்த விபத்தில் சவுந்தர்யா படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குழந்தை புகழ்நிதிக்கு காலில் காயமும், முல்லையரசு, ஆட்டோ டிரைவர் சுப்பிரமணி ஆகியோர் லேசான காயமடைந்தனர். இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சோகம்

கிருஷ்ணகிரி அருகே விபத்தில் பலியான தந்தையின் இறுதி சடங்கில் பங்கேற்க வந்த மகள் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்