விஷம் குடித்து விவசாயி தற்கொலை
கடலூர் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை திருமணமான ஓராண்டில் சோகம்
ரெட்டிச்சாவடி
புதுச்சேரி மாநிலம் நோணாங்குப்பத்தை சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 33). விவசாயியான இவருக்கும், பிரியங்கா(23) என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் கணவன், மனைவி இருவருக்கும் இடையே குடும்ப சண்டை ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக மன உளைச்சலில் இருந்த சந்திரசேகரன் ரெட்டிச்சாவடி அடுத்த மேட்டுக்குப்பம் பகுதியில் உள்ள நிலத்தில் பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சந்திரசேகரனை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமான ஓராண்டில் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப சண்டை காரணமாக விவசாயி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.