பா.ஜனதாவில் குடும்ப அரசியல் வரவே வராது

பா.ஜனதாவில் குடும்ப அரசியல் வரவே வராது என்று திட்டவட்டமாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Update: 2023-07-30 18:45 GMT

சாயல்குடி, 

பா.ஜனதாவில் குடும்ப அரசியல் வரவே வராது என்று திட்டவட்டமாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பதநீர் அருந்தினார்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் யாத்திரையை முடித்துக் கொண்ட அண்ணாமலை, சாயல்குடிக்கு சென்று அங்குள்ள பனை தோப்பு பகுதிக்கு சென்றார். அங்கு பனைத்தொழிலாளர்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அவர்கள் கொடுத்த பதநீர் அருந்திய பின்பு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழகத்தில் ஏராளமான பனை மரங்கள் உள்ளன. பிற மாவட்டங்களை விட, ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான பனை மரங்கள் வளர்ந்து நிற்கின்றன. பதநீர், கருப்பட்டி, அச்சு வெல்லம் என ஏராளமான பொருட்களை நமக்கு பனை மரங்கள் அளிக்கின்றன. பனைத் தொழிலாளர்கள் ஏராளமானோர் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். பனை மரங்களையும் அதனை சார்ந்துள்ள தொழிலாளர்களையும் பாதுகாக்க வேண்டும் என்பது பா.ஜ.க.வின் நீண்ட நாள் கோரிக்கை.

ஆனால் மாநில அரசு இத்தொழிலை நசுக்கும் வேலைகளில் ஈடுபட்டு உள்ளது. வரும் காலங்களில் பனைத்தொழிலாளர்களுக்கு உதவிகரமாக நாங்கள் இருப்போம் என்பதை இந்த நேரத்தில் உறுதி அளிக்கிறேன்.

ரேஷனில் கருப்பட்டி

பனை மரத்திலிருந்து கிடைக்கும் கள் விற்பனையை ஊக்கப்படுத்தினால் டாஸ்மாக் நிறுவன வருமானம் கடுமையாக பாதிக்கப்படும் என்பதால்தான் பனைத் தொழிலை தமிழக அரசு ஊக்குவிக்கவில்லை.

ரேஷன் கடைகளில் கருப்பட்டி விற்பனை செய்யப்பட வேண்டும். அதன் மூலம் கருப்பட்டி தயாரிக்கும் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் காக்கப்படும். மத்திய அரசு கூட விவசாய தயாரிப்பு அமைப்பு என்ற அமைப்பை உருவாக்கி பனை பொருட்களை விற்பதற்கு ஆதரவு அளிப்போம்.

வரவே வராது

பா.ஜ.க.விலும் குடும்ப அரசியல் உள்ளது என குற்றச்சாட்டு வருகிறதே? என கேட்கிறீர்கள். குடும்ப அரசியல் என்பது, ஒரு கட்சியை முழுவதுமாக ஒரு குடும்பம் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது தான். பா.ஜ.க.வில் தலைவராக உள்ள ஜே.பி. நட்டாவோ, பிரதமர் மோடியோ, அமித்ஷாவோ, நானோ, பொன். ராதாகிருஷ்ணனோ குடும்ப அரசியலை சேர்ந்தவர்களா? நுண்ணிய சல்லடையை போட்டு பார்த்தால் எங்கோ ஒரு மூலையில் ஏதோ ஒரு சிலர் இருப்பார்கள். ஆனால் தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் தி.மு.க.வில் உள்ள வாரிசு அரசியல் போல, குடும்ப ஆட்சியைப் போல பா.ஜ.க.வில் கிடையாது. வரவே வராது.

ஒரு அமைச்சர் மீது லஞ்ச வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுங்கள் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறிய பின்பும், செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக வைத்திருக்கிறார்கள் என்றால் எந்த அளவுக்கு ஊழல்வாதிகளுக்கு புகலிடமாக கொடுத்து உள்ளனர் என்று தி.மு.க.வினர் பற்றி அமித்ஷா பேசினார்.

மறுக்கவில்லை

அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், முதல்-அமைச்சரின் மகனும், மருமகனும் குறுகிய காலத்தில் 30 ஆயிரம் கோடி ரூபாய் சேர்த்துள்ளனர் என்று குற்றச்சாட்டு வைத்துள்ளார். அதற்கு இதுவரை அவர்கள் பதில் கூறவில்லை. அவரது குற்றச்சாட்டை தி.மு.க.வில் இருப்பவர்கள் ஒருவர் கூட இதுவரை மறுக்கவில்லை ஏன்?

இவ்வாறு அவர் பேட்டியின் போது கூறினார்.

உடன் முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்