உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மனுதாக்கல் செய்த வேட்பாளர் குடும்பத்தினர் திருவிழாவில் பங்கேற்க தடை
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மனுதாக்கல் செய்த வேட்பாளர் குடும்பத்தினர் திருவிழாவில் பங்கேற்க தடை
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த மாதனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நாயக்கனேரி ஊராட்சியில் வருகிற 9-ந்்தேதி ஒன்றியக்குழு உறுப்பினர் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது.
நாயக்கனேரி ஊராட்சிக்கு உட்பட்ட பனங்காட்டேரி பகுதியில் உள்ள வார்டு எண் 8-ல் போட்டியிட, அதே பகுதியை சேர்ந்த விஜியா என்பவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த நிலையில் பனங்காட்டேரி பகுதியில் இந்த வாரம் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற உள்ளது. இதற்காக கிராம பஞ்சாயத்து சார்பில் 1,500 ரூபாய் வரி விதிக்கப்பட்டுள்ளது.
எனவே, உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மனுதாக்கல் செய்த விஜியா வரி செலுத்த சென்றுள்ளார். அப்போது கிராம பஞ்சாயத்து நிர்வாகிகள் பணத்தை வாங்காமல், விஜியா ஊர் கட்டுப்பாட்டை மீறி தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாகவும், அதனால் அவரது குடும்பத்தினர் திருவிழாவில் பங்கேற்க கூடாது எனவும், கிராம மக்கள் யாரும் அவரிடம் பேசக்கூடாது எனவும் பஞ்சாயத்து நிர்வாகிகள் கூறியதாக தெரிகிறது.
இதுகுறித்து ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணனிடம் விஜியா புகார் அளித்தார். அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையிலான போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.