வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் பட்டுப்போன மரத்தை அகற்ற வேண்டும்
மூங்கில்துறைப்பட்டு-திருக்கோவிலூர் சாலையில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் பட்டுப்போன மரத்தை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மூங்கில்துறைப்பட்டு
பிரதான சாலை
மூங்கில்துறைப்பட்டு பகுதியிலிருந்து திருக்கோவிலூர் செல்லும் பிரதான சாலையில் தினமும் நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்கள், அரசு மற்றும் தனியார் பஸ்கள், பள்ளி-கல்லூரி வாகனங்கள் சென்று வருகின்றன.
மேலும் விவசாய நிலங்களில் அறுவடை செய்த கரும்புகளை டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் ஏற்றி இந்த சாலை வழியாகத்தான் மூங்கில்துறைப்பட்டில் உள்ள கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு விவசாயிகள் கொண்டு செல்கின்றனர்.
கிளைகள் ஒடிந்து விழுகிறது
இந்தநிலையில் இந்த சாலையில் வடமாமாந்தூர் பஸ் நிறுத்தம் அருகே பட்டுப்போன பெரிய மரம் ஒன்று நிற்கிறது. முற்றிலும் காய்ந்த நிலையில் அது இப்ப விழவோ... எப்ப விழவோ... என்றபடி அந்த வழியாக செல்லும் வாகனஒட்டிகள், பாத சாரிகளை அச்சுறுத்தி வருகிறது.
பலத்த காற்று வீசும்போது மரத்தின் காய்ந்து போன கிளைகள் அவ்வப்போது ஒடிந்து சாலையில் விழுகிறது. இதில் சில கிளைகள் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளின் மீது விழுந்து அவர்கள் லேசான காயம் அடைந்து வரும் சம்பவமும் நிகழ்ந்து வருகிறது. எனவே பாதசாரிகள், வாகன ஒட்டிகளை அச்சுறுத்தி வரும் பட்டுப்போன மரத்தை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை
இதுகுறித்து அவர்கள் கூறும்போது, தற்போது சிறிய அளவிலான கிளைகள் உடைந்து விழுவதால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் லேசான காயத்துடன் உயிர் தப்பி வருகிறார்கள். இனி பருவமழை தொடங்கி விட்டதால் பலத்த காற்று வீசும்போது அதன் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் மரம் சாய்ந்து விழவோ அல்லது அதன் பெரிய கிளைகள் உடைந்து விழவோ வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பட்டுப்போன இந்த மரத்தை அகற்ற வேண்டும் என சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே அசம்பாவிதங்கள் நிகழ்வதற்கு முன்னதாக வாகன ஓட்டிகள், பாதசாரிகளை காவு வாங்க காத்து நிற்கும் பட்டுப்போன மரத்தை உடனடியாக அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.