தேங்காய் சிரட்டை விலை வீழ்ச்சி

நெகமம் பகுதியில் தேங்காய் சிரட்டை விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

Update: 2023-02-23 18:45 GMT

நெகமம்

நெகமம் பகுதியில் தேங்காய் சிரட்டை விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

கொப்பரை உற்பத்தி

நெகமம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் தென்னை விவசாயம் பிரதானமாக உள்ளது. தென்னையில் இருந்து தேங்காய், இளநீர், ஓலை, மட்டை, நார், சிரட்டை உள்பட பல்வேறு பொருட்கள் கிடைக்கிறது. நேரடியாக தேங்காய் மட்டும் விற்பனை செய்து வந்த விவசாயிகள், படிப்படியாக மதிப்பு கூட்டுப்பொருட்கள் உற்பத்தி செய்யவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதில் கொப்பரை உற்பத்தி முக்கிய பங்கு வகிக்கிறது. கொப்பரையை எடுக்கும்போது, தேங்காயில் இருந்து மட்டை மற்றும் சிரட்டை பிரித்தெடுக்கப்படுகிறது. இவ்வாறு பெறப்படும் மட்டை, தென்னை நார் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது.

விலை குறைந்தது

சிரட்டையில் இருந்து கப்புகள், கரண்டிகள் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் கரி உற்பத்திக்கு மூலப்பொருள் தயாரிக்கப்படுகிறது. இதனால் சிரட்டைக்கு, சந்தையில் ஆண்டு முழுவதும் கிராக்கி உள்ளது. இதன் காரணமாக கொப்பரை உலர் களங்களில் நேரடியாக சிரட்டையை கொள்முதல் செய்து வந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு டன் சிரட்டை ரூ.14 ஆயிரத்துக்கு விற்பனையாகி வந்தது.

இந்த நிலையில் தட்டுப்பாடு இல்லாத காரணத்தால், சிரட்டை விலை குறைய தொடங்கி உள்ளது. அதாவது ஒரு டன் சிரட்டை ரூ.9 ஆயிரத்துக்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். கொப்பரை உற்பத்தி அதிகளவில் இல்லாதபோதும், கிடப்பில் வைத்திருந்த சிரட்டைகளை விவசாயிகள் விற்பனை செய்ய தொடங்கியுள்ளதால், தட்டுப்பாடு குறைந்து உள்ளதாக கூறப்படுகிறது.

மதிப்பு கூட்டு பொருட்கள்

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

கொப்பரை உற்பத்தியின்போது பிரித்தெடுக்கப்படும் சிரட்டையில் இருந்து பல்வேறு மதிப்புக்கூட்டு பொருட்கள் தயாரிக்க முடியும். ஆனால் அதற்கான முறையான பயிற்சிகள் மற்றும் வழிகாட்டுதல்கள் எங்களுக்கு கிடைப்பதில்லை. இதனால் விலை வீழ்ச்சியின்போது பாதிக்கப்படுகிறோம். எனவே பயிற்சி அளிக்க அரசு முன்வர வேண்டும். மேலும் சிரட்டைக்கு விலை அரசே நிர்ணயிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்