வடமாநில தொழிலாளர்கள் குறித்து போலி வீடியோ: பீகார் வாலிபர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது

வடமாநில தொழிலாளர்கள் குறித்து போலி வீடியோ வெளியிட்ட வழக்கில் பீகார் வாலிபர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது

Update: 2023-04-06 20:14 GMT


தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் கடுமையாக தாக்கப்படுகின்றனர். இங்கு அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது போல சித்தரிக்கப்பட்ட வீடியோ சமூகவலைதளங்களில் சமீபத்தில் பரவி வைரலானது. இந்த தகவல் உண்மையானது இல்லை என்றும் தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்களுக்கு போதுமான பாதுகாப்புகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். மேலும், சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டது.

அதன்படி போலீசார் விசாரணை நடத்தியதில், பீகாரைச் சேர்ந்த மணிஷ் காஷ்யப் (வயது 35) என்பவர் பொய்யான வீடியோவை வெளியிட்டு வடமாநிலத்தவர்களிடம் பீதியை கிளப்பியது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். போலீஸ் காவல் முடிந்ததை தொடர்ந்து மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தியதில் அவருக்கு 19-ந்தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் மணிஷ் காஷ்யப் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் பரிந்துரைத்தார்.

அதன்பேரில், மணிஷ் காஷ்யப் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான, உத்தரவு மதுரை மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்