கள்ளக்காதல் விவகாரத்தில் தீர்த்துக்கட்டியது அம்பலம்
சின்னமனூரில் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பமாக கள்ளக்காதல் விவகாரத்தில் தீர்த்துக்கட்டியதாக கைதான 2 பேர் பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர்.
வாலிபர் குத்திக்கொலை
தேனி மாவட்டம் சின்னமனூர் சாமிகுளம் பகுதியை சேர்ந்த அபுதாகீர் மகன் காபில் கான் (வயது 22). இவர் பட்டப்படிப்பு முடித்துவிட்டு, அரசு போட்டித்தேர்வுக்கு தயாராகி வந்தார். இவரும், அதே பகுதியை சேர்ந்த காதர் மகன் முகமது சமீர் (19) என்பவரும் நண்பர்கள். இதனால் அவர்கள் 2 பேருக்கும் இடையே பணம் கொடுக்கல்-வாங்கல் இருந்தது. ஒருகட்டத்தில் பண பிரச்சினையில் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, முன்விரோதம் இருந்து வந்தது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு காபில் கானை, முகமது சமீர் சின்னமனூர் வண்டிப்பேட்டை அருகில் சி.எஸ்.ஐ. பள்ளி தெருவுக்கு வருமாறு அழைத்தார். அதன்படி, காபில்கான் அங்கு சென்றார். அப்போது முகமது சமீர், தனது அக்காள் கணவரான சின்னமனூரை சேர்ந்த அலாவுதீனுடன் (29) நின்று கொண்டிருந்தார். அவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த முகமது சமீரும், அலாவுதீனும் சேர்ந்து காபில்கானை கத்தியால் குத்தி கொலை செய்தனர்.
இதுகுறித்து சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முகமது சமீர் மற்றும் அலாவுதீனை கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் அளித்த வாக்குமூலம் விவரம் வருமாறு:-
கள்ளக்காதல் விவகாரம்
அலாவுதீன், தனது மனைவி ஷாபனா (25) உடன் முகமது சமீரின் வீட்டில் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தார். கொலை செய்யப்பட்ட காபில்கான், முகமது சமீரின் நண்பர் என்பதால் அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்றார். மேலும் பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக ஷாபனாவிடம் அவர் பேசி வந்தார். நாளடைவில் அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக உருவானது. இதனால் காபில்கானும், ஷாபனாவும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அறிந்த அலாவுதீன் மற்றும் குடும்பத்தினர் ஷாபனாவையும், காபில்கானையும் கண்டித்தனர். மேலும் கள்ளக்காதல் தொடர்பாக அலாவுதீனுக்கும், ஷாபனாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதற்கு காரணமான காபில்கானை கொலை செய்ய அலாவுதீன், முகமது சமீர் ஆகியோர் முடிவு செய்தனர். அதன்படி, சம்பத்தன்று இரவு ஷாபனாவை காபில்கானுக்கு செல்போன் மூலம் தொடர்பு கொள்ள செய்து, சின்னமனூர் சி.எஸ்.ஐ. பள்ளி தெருவுக்கு வரவழைத்து கத்தியால் குத்திக்கொன்றது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.