காஞ்சீபுரம் அருகே போலி பெண் டாக்டர் கைது
காஞ்சீபுரம் அருகே போலி பெண் டாக்டர் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.
காஞ்சீபுரம் அருகே தாமல் கிராமத்தில் பெண் ஒருவர் மருத்துவ படிப்பு ஏதும் படிக்காமல், நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்து வருவதாக சுகாதார பணிகள் இணை இயக்குனர் அலுவலகத்திற்கு புகார்கள் வந்தது.
புகார்களின்பேரில் காஞ்சீபுரம் மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் டாக்டர் கோபிநாத் தலைமையிலான குழுவினர் தாமல் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றனர்.
அங்கு அவர்கள் நடத்திய சோதனையில் மருத்துவ படிப்பு ஏதும் படிக்காமல் திலகவதி என்கிற பரிதபேகம் (வயது 45) என்பவர் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து காஞ்சீபுரம் மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் டாக்டர் கோபிநாத், பாலுச்செட்டி சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் போலி பெண் டாக்டர் திலகவதி என்கிற பரிதபேகத்தை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.