போலி டாக்டர் பட்டம் - சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் போலி டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது தொடர்பான வழக்கில் சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Update: 2023-07-22 17:05 GMT

சென்னை,

சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை ஆணையம் என்ற பெயரில் அரசு முத்திரையை தவறாக பயன்படுத்தி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் போலியாக டாக்டர் பட்டம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

பல்கலைக்கழகமே இல்லாத ஒரு அமைப்பு, சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் டாக்டர் பட்டம் என்று மெகா மோசடியை அரங்கேற்றியது. இசையமைப்பாளர் தேவா, நடிகர் கோகுல், கஜராஜ், நடன இயக்குனர் சாண்டி, ஈரோடு மகேஷ் இப்படி சில பிரபலங்களை முன்னிறுத்தி 50க்கும் மேற்பட்டோருக்கு கவுரவ டாக்டர் பட்டம் என்ற பெயரில் போலியான டாக்டர் பட்டங்களை ஓய்வு பெற்ற நீதிபதி வழங்கினார்.

சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை ஆணையத்தின் விருது நிகழ்ச்சி என்று நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழில் அண்ணா பல்கலைக்கழகம் என்பதை பெரிதாக அச்சிட்டிருந்தனர். அரசு நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ்களில் மட்டுமே அச்சிடக்கூடிய அரசு முத்திரையும் சட்ட விரோதமாக அச்சிடப்பட்டிருந்தது. இதனால் அண்ணா பல்கலைக்கழகமே தங்களுக்கு டாக்டர் பட்டம் வழங்குவதாக விழாவுக்கு வந்திருந்தவர்கள் நம்பி விட்டனர் .

இதே நிகழ்ச்சியில் தனியார் கோயில் நிர்வாகிகள், ஜோதிடர்கள், ரியல் எஸ்டேட் அதிபர்கள், ஊராட்சி மன்ற நிர்வாகிகள் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்டோருக்கும் டாக்டர் பட்டங்களை வழங்கியதாக கூறப்பட்டது. இந்த விழாவில் டாக்டர் பட்டம் பெறுவதற்கு வராமல் வீட்டிலேயே இருந்த நடிகர் வடிவேலுவுக்கு வீடுதேடிச்சென்று டாக்டர் பட்டம் வழங்கிய மோசடி ஆசாமிகள், வடிவேலுவிடம் தங்கள் கவுன்சில் சார்பில் மதிப்புறு முனைவர் என்கிற கவுரவ டாக்டர் பட்டம் தருவதாக கூறி அந்த போலி ஆவணத்தை கொடுக்கும் வீடியோவும் வெளியானது.

இதனையடுத்து தனியார் அமைப்பு சார்பில் டாக்டர் பட்டம் வழங்கியதும், அதற்கு அண்ணா பல்கலைக்கழகம் இடம் ஒதுக்கியதும் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனைத்தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தனது கையெழுத்தை முறைகேடாக பயன்படுத்தி உள்ளதாக ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகமும் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் தனியார் அமைப்பின் இயக்குனர் ராஜூ ஹரிஷ், மகாராஜன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

இந்த சூழலில் அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கோட்டூர்புர காவல் நிலையத்தில் அளித்த புகாரை ரத்து செய்ய வேண்டும் என மகாராஜன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றம் விசாரணை ஆணையம் அமைத்து விசாரணை நடத்தினால் காவல்துறையினரின் அதிகாரத்தில் தலையிடுவது போல் அமைந்து விடும். எனவே மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது. எனினும் அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் அளித்த புகாரின் பேரில் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் மீது காவல்துறை விசாரணை நடத்தி 3 மாதங்களில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்