போலி பஸ்பாஸ் தயாரித்தவர் கைது
போலி பஸ்பாஸ் தயாரித்தவர் கைது செய்யப்பட்டார்.
திருமங்கலம்,
திருநகர் முல்லைநகரை சேர்ந்தவர் பாண்டித்துரை (வயது 52). இவர் திருமங்கலம் அருகே உள்ள அப்பக்கரை அரசு உயர்நிலை பள்ளியில் லேப் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். பாண்டித்துரை திருநகரிலிருந்து அப்பாகரைக்கு டவுன் பஸ்சில் சென்று வருவது வழக்கம். அவர் பஸ் செலவை குறைப்பதற்காக கம்பம் போக்குவரத்து பணிமனையில் நடத்துனராக உள்ளதாக போலி பஸ்பாஸ் தயாரித்ததாக கூறப்படுகிறது. அந்த போலி பஸ்பாஸ் மூலம் தினமும் பஸ்சில் சென்று வந்துள்ளார்.
நேற்று முன்தினம் திருமங்கலத்தில் இருந்து அப்பகரைக்கு வழக்கம்போல் பாண்டித்துறை டவுன் பஸ்சில் சென்றார். அப்போது பஸ்சில் ஏறிய மதுரை போக்குவரத்து கழக பரிசோதகர் ராமகிருஷ்ணன் பயணிகளிடம் டிக்கெட் வாங்கி பரிசோதனை செய்தார். பாண்டித்துரை அவரிடம் பஸ்பாஸ்சை காண்பித்துள்ளார். ஆனால் அது போலியானது என்பதை அறிந்த ராமகிருஷ்ணன் இதுகுறித்து திருமங்கலம் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாண்டித்துரையை கைது செய்தனர்.