துளிர்க்காத மரங்களால் தளர்ந்த நம்பிக்கை
துளிர்க்காத மரங்களால் நம்பிக்கை தளர்ந்தது.;
மரங்கள் இயற்கையின் கொடை. இயற்கை அன்னையின் மடியில் மலர்ந்த முதல் குழந்தை. மரம் என்பது இவ்வுலகில் வாழும் உயிர்களுக்கு கிடைத்த இன்றியமையாத இயற்கை வளம் ஆகும். நாம் உயிர் வாழ நிலம், நீர், காற்று எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு இந்த மரங்கள் அவசியம் வாய்ந்தவையாகும். வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் என்பது அன்றைய வாசகம். ஆனால் ஆளுக்கு ஒரு மரம் வளர்க்க வேண்டிய தேவை இன்று ஏற்பட்டுள்ளது.
மறுநடவு செய்யப்படும் மரங்கள்
மேலும் நாளுக்கு நாள் வாகன பெருக்கம் அதிகரித்து வருவதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. மேலும் விபத்துகளும் ஏற்படுவதால் முக்கிய சாலைகள் அகலப்படுத்தப்பட்டு வருகின்றன. ரோடு மற்றும் கிராமத்து சாலைகளும் அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் சாலை அகலப்படுத்தும் பணிக்கு இடையூறாக உள்ள மரங்கள் வெட்டி அகற்றப்படுகின்றன.
வெட்டப்படும் மரங்களுக்கு ஈடாக மரங்களை நட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளதால் நெடுஞ்சாலைத்துறை மூலம் சாலை அகலப்படுத்தப்பட்ட பகுதிகளில் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. சாலை விரிவாக்க பணிக்காக ஆய்வு செய்து வருவாய் துறை மூலம் அனுமதி பெற்று தேவையான மரங்கள் மட்டும் வெட்டப்பட்டு வருகின்றன. இதற்கிடையில் மறுநடவு செய்ய கூடிய மரங்களை வெட்டாமல் வேரோடு பிடுங்கி மற்ற பகுதிகளில் நடப்பட்டு வருகின்றன.
துளிர்க்கவில்லை
இந்தநிலையில் திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் ஆக்கி, தடகளம் உள்ளிட்ட பல்வேறு மைதானங்கள் உள்ளன. இந்த வளாகத்தில் கிழக்கு பகுதியில் கடந்த ஆண்டு வரை அடர்த்தியாக 10-க்கும் மேற்பட்ட பெரிய மரங்கள் இருந்தன. இதனால் அந்த பகுதியில் விளையாட்டு மைதானம் அமைப்பது போன்றவற்றுக்கு, அந்த இடத்தை பயன்படுத்த முடியாத நிலையும் இருந்தது. கடந்த டிசம்பர் மாதம் 29-ந்தேதி திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதற்காக அந்த வளாகத்தில் பிரமாண்ட பந்தல் அமைக்க அந்த மரங்கள் அனைத்தும் வெட்டப்பட்டு மற்றொரு பகுதியில் மறுநடவு செய்யப்பட்டன. மேலும் அந்த மரங்கள் ஓரிரு மாதங்களில் துளிர்க்கும் என்று நம்பிக்கையும் வைத்திருந்தனர். ஆனால் சரியாக பராமரிக்காததால் அந்த மரங்கள் மறுநடவு செய்து 8 மாதங்களுக்கு மேலாகியும் துளிர்க்கவில்லை.
முறையாக பராமரிக்க வேண்டும்
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், சாலையோரங்களில் மரங்களை வெட்டிய கையோடு அவற்றுக்கு பதிலாக மரக்கன்றுகள் நடும் பணி வரவேற்கத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் மரக்கன்றுகளை முறையாக பராமரிக்க வேண்டும். சில இடங்களில் பராமரிக்காமல் விடுவதால் மரக்கன்றுகள் கருகிப்போய் விடுகிறது. இதேபோன்று மறுநடவு செய்யப்படும் மரங்களையும் அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்து, மரங்கள் வாடாமல் இருக்க தண்ணீர் ஊற்றுதல் உள்ளிட்ட பணிகளை கண்காணிக்க வேண்டும். அப்போது தான் மறுநடவு செய்யப்பட்ட மரங்கள் துளிர்க்கும் என்றனர்.