ரேஷன் கடைகளில் மத்திய, மாநில அரசுகளின் அரிசிக்கு தனித்தனி ரசீது; தமிழகத்தில் இன்று முதல் அமல்

ரேஷன் கடைகளில் மத்திய, மாநில அரசுகளின் அரிசிக்கு தனித்தனி ரசீது வழங்கும் புதிய முறை தமிழகத்தில் இன்று முதல் அமலாகிறது.

Update: 2022-12-31 22:14 GMT

தனித்தனி ரசீது

மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகள், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் முதுநிலை மண்டல மேலாளர், அனைத்து வட்ட வழங்கல் அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

பொது வினியோக திட்டம் மூலமாக ரேஷன் கடைகளில் பி.எச்.எச். (முன்னுரிமை குடும்ப அட்டை) மற்றும் ஏ.ஏ.ஒய். (அந்தியோதயா அன்ன யோஜனா) கார்டுதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்யப்படும்போது, அரிசியை மட்டும் முதல் ரசீதாக மத்திய அரசு ஒதுக்கீட்டிலும், 2-வது ரசீதாக மாநில அரசு ஒதுக்கீட்டிலும் தனித்தனியாக பி.ஓ.எஸ். (பாய்ண்ட் ஆப் சேல்) எந்திரம் பதிவு செய்யுமாறு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை கமிஷனர் அறிவுறுத்தியுள்ளார்.

அந்த அறிவுரையின்படி, அனைத்து ரேஷன் கடைகளிலும் புதிய முறையினை பின்பற்றி பி.எச்.எச். மற்றும் ஏ.ஏ.ஒய். கார்டுதாரர்களுக்கு மட்டும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கும்போது, புதிய முறைப்படி அரிசி மட்டும் மத்திய அரசு ஒதுக்கீட்டில் முதல் ரசீதாகவும், அரிசி மற்றும் இதர பொருட்களை இரண்டாவது ரசீது ஆக மாநில அரசு ஒதுக்கீட்டிலும் என 2 ரசீது பதிவு செய்யவேண்டும்.

மத்திய-மாநில அரசு ஒதுக்கீடு

பி.எச்.எச். கார்டுகளில், அரிசி ஒதுக்கீடு 12 கிலோவாக இருக்கும்பட்சத்தில் புதிய முறைப்படி 5 கிலோ அரிசி மத்திய அரசு ஒதுக்கீட்டிலும், 7 கிலோ அரிசி மற்றும் இதர பொருட்கள் மாநில அரசு ஒதுக்கீட்டிலும் வழங்கவேண்டும். அரிசி ஒதுக்கீடு, 14 கிலோவாக இருக்கும்பட்சத்தில் 10 கிலோ மத்திய அரசு ஒதுக்கீட்டிலும், 4 கிலோ மற்றும் இதர பொருட்கள் மாநில அரசு ஒதுக்கீட்டிலும், 16 கிலோவாக இருக்கும்போது 10 கிலோ மத்திய அரசு ஒதுக்கீட்டிலும், 6 கிலோ மாநில அரசு ஒதுக்கீட்டிலும் வழங்கவேண்டும்.

அரிசி ஒதுக்கீடு 18 கிலோவாக இருக்கும்போது, 15 கிலோ மத்திய அரசு ஒதுக்கீட்டிலும், 3 கிலோ மற்றும் இதர பொருட்கள் மாநில அரசு ஒதுக்கீட்டிலும், 20 கிலோவாக இருக்கும்போது (அலகு-3) (2 பெரியவர், 2 குழந்தை) 15 கிலோ மத்திய அரசு ஒதுக்கீட்டிலும், 5 கிலோ மற்றும் இதர பொருட்கள் மாநில அரசு ஒதுக்கீட்டிலும் வழங்கவேண்டும். அரிசி ஒதுக்கீடு 20 கிலோ (அலகு-4), 25 கிலோ, 30 கிலோ, 35 கிலோவாக இருக்கும்பட்சத்தில் அரிசி மொத்த அளவையும் மத்திய அரசு ஒதுக்கீட்டிலும், இதர பொருட்களை மாநில அரசு ஒதுக்கீட்டிலும் வழங்கவேண்டும்.

இன்று முதல் அமல்

ஏ.ஏ.ஒய். கார்டுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 35 கிலோ அரிசியையும் முதல் ரசீதாக மத்திய அரசு ஒதுக்கீட்டிலும், 2-வது ரசீதாக இதர பொருட்கள் மட்டும் மாநில ஒதுக்கீட்டில் வழங்கவேண்டும். கார்டுதாரர்கள் கோதுமை பெற விரும்பினால் புதிய முறையில் மத்திய அரசின் தொகுப்பில் முதல் ரசீது அளவுக்கு உட்பட்ட இருப்புக்கு ஏற்றவாறு கோதுமை மற்றும் அரிசி பகிர்ந்து வழங்கலாம்.

என்.பி.எச்.எச். (முன்னுரிமை அல்லாதவர்கள்) கார்டுதாரர்களுக்கு எந்தவித மாற்றமும் இன்றி பழைய முறையையே பின்பற்றவேண்டும். புதிய முறை 1-ந்தேதி (இன்று) முதல் கண்டிப்பாக அமல்படுத்தவேண்டும். புதிய முறையை பின்பற்றாமல் அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டால், அதற்கு உண்டான வேறுபாட்டு தொகையை செலுத்த சம்பந்தப்பட்ட அலுவலர்களே பொறுப்பேற்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்