மின்சாரம் தாக்கி தொழிற்சாலை உரிமையாளர் பலி
மின்சாரம் தாக்கி தொழிற்சாலை உரிமையாளர் பலியானார்.
ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் அருகே உள்ள லாலாபேட்டை பகுதியை சேர்ந்தவர் ஜெகதீசன் (வயது 34). இவர் லாலாபேட்டை பகுதியில் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் லாலாபேட்டையை அடுத்த கிருஷ்ணாவரம் பகுதியில் உள்ள மற்றொரு தொழிற்சாலையில் இருந்து, தனது தொழிற்சாலைக்கு தேவையான பொருட்களை ஏற்றி வர, டிராக்டரில் சென்று உள்ளார். அங்குள்ள தொழிற்சாலையில் கிரேன் இயக்க ஆள்இல்லாததால், அவரே கிரேன் இயக்கியுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக அவரை மின்சாரம்தாக்கி உள்ளது. இதில் படுகாயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது குறித்து சிப்காட் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.