தமிழக காங்கிரசில் வெடித்தது கோஷ்டி மோதல்: கே.எஸ்.அழகிரிக்கு எதிராக மூத்த தலைவர்கள் போர்க்கொடி
தமிழக காங்கிரசில் மீண்டும் கோஷ்டி மோதல் வெடித்துள்ளது. கே.எஸ்.அழகிரிக்கு எதிராக மூத்த தலைவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்திரா காந்தி சிலைக்கு தனித்தனியாக மாலை அணிவித்தனர்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் கடந்த 15-ந் தேதி காங்கிரஸ் கட்சியினரிடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக கட்சியின் மாநில பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. மற்றும் எஸ்.சி. பிரிவு தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் ஆகியோருக்கு கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதில் வருகிற 24-ந் தேதி சத்தியமூர்த்தி பவனில் நடைபெற உள்ள ஒழுங்கு நடவடிக்கை குழுவில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 105-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் சென்னை வால்டாக்ஸ் சாலையில் உள்ள இந்திராகாந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது என்றும், அதைத்தொடர்ந்து 'இந்தியாவின் வளர்ச்சியில் இந்திரா காந்தியின் பங்கு' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெறுவதாகவும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, முன்னாள் தலைவர்கள் கே.வி.தங்கபாலு, திருநாவுக்கரசர் எம்.பி., ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி, வால்டாக்ஸ் சாலையில் உள்ள இந்திரா காந்தியின் சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற்ற மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி மற்றும் அதைத்தொடர்ந்து, சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற இந்திரா காந்தியின் உருவ படத்துக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி மற்றும் கருத்தரங்கில், கன்னியாகுமரி தொகுதி எம்.பி. விஜய் வசந்த், மாநில துணைத்தலைவர்கள் பொன்.கிருஷ்ணமூர்த்தி, கோபண்ணா, ஆர்.தாமோதரன், மாநில பொதுச்செயலாளர்கள் கே.சிரஞ்சீவி, தளபதி பாஸ்கர், இமயா கக்கன், சேவா தள தலைவர் குங்பூ விஜயன், இலக்கிய அணி தலைவர் பி.எஸ்.புத்தன், மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவ.ராஜசேகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அதே நேரத்தில், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் கே.வி.தங்கபாலு, திருநாவுக்கரசர் எம்.பி., ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கிருஷ்ணசாமி ஆகியோர் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவினர் வால்டாக்ஸ் சாலையில் உள்ள இந்திரா காந்தியின் சிலைக்கு தனியாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதைத்தொடர்ந்து மூத்த தலைவர்கள் சத்தியமூர்த்தி பவனுக்கு செல்லாமல், சென்னை எழும்பூரில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் கே.எஸ்.அழகிரிக்கு எதிராக ஆலோசனை கூட்டம் நடத்தினர். இந்த நிகழ்ச்சிகளில் மாநில பொதுச்செயலாளர்கள் ரங்கபாஷ்யம், டி.செல்வம், கே.விஜயன், எம்.ஜோதி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதன் மூலமாக கே.எஸ்.அழகிரிக்கு எதிராக மூத்த தலைவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியை பதவியில் இருந்து நீக்குவதற்கான ஆலோசனைகளை மேற்கொண்டதாக தெரிகிறது. மேலும், டெல்லிக்கு சென்று கே.எஸ்.அழகிரி குறித்து புகார் தெரிவிக்கவும் முடிவு செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதன் மூலம் கே.எஸ்.அழகிரி தலைமை பொறுப்பேற்ற பிறகு இதுவரை இல்லாத கோஷ்டி பூசல் நேற்று வெடித்துள்ளதாக கருதப்படுகிறது.