மழை பெய்தும் நிரம்பாத கண்மாய்கள்

விருதுநகர் மாவட்டத்தில் மழை பெய்தும் நிரம்பாத கண்மாய்கள் உள்ளது.

Update: 2022-11-23 20:29 GMT

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என பஞ்ச பூதங்களின் கூட்டு சேர்க்கையால் உலகம் இயங்கி கொண்டு இருக்கிறது. அதிலும் குறிப்பாக நீரின்றி இந்த உலகில் எந்த உயிரும் இயங்காது.

ஆதலால் தான் 'நீரின்றி அமையாது உலகு' என்று தண்ணீரின் முக்கியத்துவத்தை ஒரே வரியில் திருவள்ளூவர் விளக்கி உள்ளார். அதேபோல் நமது முன்னோர்கள் 'மாரியல்லது காரியமில்லை' என்று குறிப்பிட்டனர். இளங்கோவடிகள் 'மாமழை போற்றுதும், மாமழை போற்றுதும்' என்று மழையை போற்றி வணங்கி தம் காப்பியத்தை தொடங்கினார்.

இயற்கையின் கொடை

உலகிற்கு ஆதாரமாக விளங்கும் நீரானது பூமிக்கு பல வழிகளில் கிடைத்தாலும் பெரும் பங்கு மழை நீர் மூலமே கிடைக்கின்றது. கடுமையான நீர் பற்றாக்குறையை எதிர்கொண்டு வரும் உலக மக்களுக்கு இயற்கையின் கொடையாக கிடைக்கும் மழை நீரை சேமிப்பதன் மூலம் தண்ணீர் பஞ்சத்தில் இருந்து விடுபட முடியும்.

விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு, தீப்பெட்டி, அச்சகம், நூற்பு மில்கள், நெசவு தொழில் என பல்வேறு வகையான தொழில்கள் இருந்தாலும் பெரும்பாலானோர் விவசாயத்தை நம்பி தான் வாழ்ந்து வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டத்தில் பிளவக்கல், வெம்பக்கோட்டை, ஆனைக்குட்டம், குல்லூர் சந்தை, கோல்வார்பட்டி, இருக்கன்குடி, சாஸ்தா கோவில் ஆகிய அணைகள் உள்ளன. இதுதவிர மாவட்டத்தில் அடிப்படை நீர் நிலைகளான ஊருணிகள், கண்மாய்கள் ஆகியவையும் பரவலாக உள்ளன. இவற்றை நம்பி தான் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இவர்களுக்கு முழுவதும் வடகிழக்கு பருவமழை தான் கை கொடுக்கிறது. வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்தால் தான் அணைகள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பும். விவசாயமும் நன்கு செழித்து வளரும். என்னதான் மழை பெய்தாலும் விருதுநகர் மாவட்டம் வறட்சி மிகுந்த மாவட்டமாகவே தொடர்ந்து இருந்து வருகிறது. இதற்கு காரணம் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு நிறைந்ததும், முறையான திட்டமிடல் இல்லாததும் தான் என விவசாயிகள் வேதனையுடன் கூறுகின்றனர்.

1,054 கண்மாய்கள்

மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் நிர்வாகத்தில் குண்டாற்றுப்படுகையில் 117 கண்மாய்களும், வைப்பாற்றுப்படுகையில் 225 கண்மாய்களும் ஆக மொத்தம் 342 கண்மாய்கள் உள்ளன. இது தவிர ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டில் அருப்புக்கோட்டை கோட்டத்தில் 476 கண்மாய்களும், சிவகாசி கோட்டத்தில் 81 கண்மாய்களும், ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டத்தில் 155 கண்மாய்களும் ஆக மொத்தம் 712 கண்மாய்கள்உள்ளன. இரு துறைகளின் கட்டுப்பாட்டில் 1,054 கண்மாய்கள் உள்ளன.

அருப்புக்கோட்டை கோட்டத்தில் 1,243 ஊருணிகளும், சிவகாசி கோட்டத்தில் 950 ஊருணிகளும், ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டத்தில் 732 ஊருணிகளும் ஆக மொத்தம் 2,925 ஊருணிகள் உள்ளன. இந்த நீர்நிலைகள் மூலம் அருப்புக்கோட்டை கோட்டத்தில் 152 கிராம பஞ்சாயத்துகளும், அதில் அடங்கிய 513 கிராமங்களும், சிவகாசி கோட்டத்தில் 128 கிராம பஞ்சாயத்துக்களில் உள்ள 633 கிராமங்களும், ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டத்தில் 140 கிராம பஞ்சாயத்துகளில் உள்ள 634 கிராமங்களும் ஆக மொத்தம் 420 கிராம பஞ்சாயத்துக்களில் உள்ள 1,780 கிராமங்களும் பயன்பெற வேண்டிய நிலையில் உள்ளன.

மழை அளவு

ஆனால் இந்த நீர் நிலைகள் முறையாக பராமரிக்கப்படாததால் மாவட்டத்தில் உள்ள கிராமப்பகுதிகள் அனைத்தும் பாசனத்திற்கு தேவையான தண்ணீர் இல்லாமல் பாதிப்பு அடைந்துள்ளது. இதற்கு காரணம் இந்த நீர் நிலைகளும், அதற்கான நீர் வரத்து கால்வாய்களும் ஆக்கிரமிக்கப்பட்டது தான்.

விருதுநகர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் சராசரியாக 820.1 மி.மீ மழை பெய்யும் நிலையில் கடந்த 2021-ம் வருடம் 1,130.16 மி.மீ. மழை பெய்துள்ளது. நடப்பாண்டில் இதுவரை 810.28 மி.மீ. மழை பெய்துள்ளது. ஆனாலும் வடகிழக்கு பருவமழையை பொருத்தமட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 340.03 மி.மீ. பெய்துள்ள நிலையில் நடப்பாண்டில் இதுவரை 171.74 மி.மீ மழையே பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை வழக்கமாக 419 மி. மீ. பெய்யும் நிலையில் இதுவரை 337.42 மி.மீ. பெய்துள்ளது.

பயிர் சாகுபடி

இந்த மழையும் பரவலாக பெய்யாமல் மேற்கு பகுதியில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூரிலும், கிழக்குப்பகுதியில் திருச்சுழி, காரியாபட்டி பகுதியிலும் பெய்துள்ளது. மலையடிவாரத்தில் உள்ள வத்திராயிருப்பு பகுதியில் எதிர்பார்த்த அளவிற்கு மழை பெய்யவில்லை.

மாவட்டத்தில் 25 சதவீதம் இறவை சாகுபடியாகவும், 75 சதவீதம் மானாவாரி சாகுபடியும் நடந்து வரும் நிலையில் கடந்த வருடம் அக்டோபர் மாதம் வரை 76ஆயிரம் ஹெக்டேர் பயிர் சாகுபடி நடந்தது. நடப்பு ஆண்டில் அக்டோபர் மாதம் வரை 74 ஆயிரம் ஹெக்டேர் நிலத்தில் தான் பயிர் சாகுபடி நடந்துள்ளது. சிறுதானியங்கள் சாகுபடியில் பாதிப்பு இல்லை என்றாலும் நெற்பயிர் சாகுபடி குறைவாக உள்ளது. ஏனெனில் கண்மாய்கள் முழுமையாக நிரம்பாத நிலையில் நெற்பயிர் சாகுபடியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உயரும் பயிர் சாகுபடி

மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் உத்தண்டராமன்:-

கடந்த ஆண்டைவிட நடப்பாண்டில் அக்டோபர் மாதம் வரை 2 ஆயிரம் ஹெக்டர் பயிர்ச்சாகுபடி குறைவாக நடந்துள்ளது. எனினும் நவம்பர் மாதத்தில் 86 ஆயிரம் ஹெக்டேராக பயிர்ச்சாகுபடி உயர வாய்ப்புள்ளது. ஓராண்டில் 1 லட்சத்து 16ஆயிரத்து 850 ஹெக்டேர் பயிர்ச் சாகுபடி நடைபெற வேண்டும். நடப்பாண்டிலும் அந்த இலக்கை எட்டிவிட முடியும். சிறுதானியங்கள் சாகுபடியில் பாதிப்பு ஏற்படாது. நெற்பயிர் இரண்டாம் போக சாகுபடி மூலம் இலக்கை எட்டி விட முடியும் என எதிர்பார்க்கிறேன்.

நிரம்பாத கண்மாய்

தமிழ்நாடு விவசாய சங்க மாநில நிர்வாகி விஜய முருகன்:-

நடப்பு ஆண்டில் வடகிழக்கு பருவமழை பரவலாக மாவட்டத்தில் எல்லா இடங்களிலும் பெய்யவில்லை. வழக்கத்தைவிட மழை குறைவு தான். மேலும் ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கண்மாய்கள் முழுவதும் நிரம்பவில்லை. எனினும் இன்னும் விவசாயிகள் இம்முறை நல்ல மகசூலை பெற வாய்ப்புள்ளதாக கருதுகின்றனர். மாவட்ட நிர்வாகம் கண்மாய் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றி கண்மாய்களில் நீர் நிரம்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விருதுநகர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையினால் எண்ணற்ற கண்மாய்கள் நிரம்பினாலும் பெரும்பாலான கண்மாய்களுக்கு தண்ணீர் வரத்து இல்லாத நிலையும் உள்ளது. மொத்தத்தில் பெரும்பாலான காலங்களில் வறட்சியின் பிடியில் சிக்கி தவிக்கும் மாவட்டம் மானாவாரி விவசாயத்தை பெரும்பாலும் நம்பியுள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் நீர் நிலைகள் அதிகம் இருந்த போதிலும் அதை முறையாக பராமரிக்காததால் அவற்றில் மழை பெய்தாலும் நிரம்ப முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி அணைகளில் இருந்து நீர்க்கசிவு ஏற்படுவதை தடுத்து நீரை தேக்கி வைக்கவும் நடவடிக்கை எடுப்பதோடு வரத்து கால்வாய்களிலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


ஆக்கிரமிப்பு

வடபட்டி சின்னமருது: சிவகாசி பகுதியில் கடந்த வாரம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதனால் சிவகாசி மற்றும் அதனை சுற்றி உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் அதிகரித்தது. ஆனால் கிராமப்புறங்களில் உள்ள கண்மாய்களுக்கு போதிய நீர் வரவில்லை. இதனால் பல இடங்களில் உள்ள கண்மாய்களில் தண்ணீர் குறைந்த அளவே காணப்படுகிறது. கண்மாய் நீர் வரத்து பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் முன் வராத நிலையில் கண்மாய்களுக்கு தண்ணீர் வருவது பாதிக்கப்படுகிறது. எனவே சிவகாசி தாலுகாவில் உள்ள கண்மாய்களுக்கு தண்ணீர் பாதைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகள் இருக்கும் பட்சத்தில் அதனை அகற்ற தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.


குடிநீர் தட்டுப்பாடு

விருதுநகர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தும் வெம்பக்கோட்டை அருகே உள்ள செவல்பட்டி பாலாறு கண்ட அய்யனார் கண்மாய், அன்னபூரணிபுரம் கிராமத்தில் உள்ள வீர சமுத்திரம் கண்மாய், அம்மையார்பட்டியில் உள்ள இலந்தைகுளம் கண்மாய், மூர்த்தி நாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள பெரிய கண்மாய் ஆகிய கண்மாயில் சிறிதளவு கூட தண்ணீர் வராததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதனால் விவசாய பணிகள் செய்ய முடியாத நிலை உள்ளது. இதுகுறித்து செவல்பட்டி விவசாயி சுந்தர் கூறுகையில், செவல்பட்டி சுற்றியுள்ள 4 கண்மாய்களுக்கும் தண்ணீர் வரததால் விவசாய பணிகளை தொடங்காமல் உள்ளோம். சென்ற ஆண்டு இந்த கண்மாய்கள் நிறைந்ததால் விவசாயம் செழித்திருந்தது. இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமாக மழை இருக்கும் என கருதி முன்கூட்டியே களை எடுத்தல், விவசாய நிலங்களை பராமரித்தல், ஆகிய பணிகளை செய்து இருந்தோம். ஆனால் மழை பெய்தும் கண்மாய்க்கு சிறிதளவு கூட தண்ணீர் வரவில்லை. இதனால் விவசாயத்திற்கு பாதிப்பு மட்டுமின்றி குடிநீர் தட்டுப்பாடு ஏற்படவும் வாய்ப்புள்ளது என்றார்.


சுட்ெடரிக்கும் வெயில்

விருதுநகரில் கடந்த 2 நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. நேற்று விருதுநகரில் வெயில் அளவு 95 டிகிரியாக இருந்தது. வடகிழக்கு பருவமழையை எதிர்நோக்கி இருக்கும் நகர் மக்களுக்கு சுட்டெரிக்கும் வெயில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.



Tags:    

மேலும் செய்திகள்