கல்லூரி மாணவியை திருமணம் செய்வதாக ரூ.3¼ லட்சம் பறிப்பு -வாலிபர் கைது

கல்லூரி மாணவியை திருமணம் செய்வதாக கூறி ரூ.3¼ லட்சம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-09-13 23:04 GMT

சென்னை,

கேரளாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், சென்னை சேத்துப்பட்டில் தங்கி கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். இவர் தனது வருங்கால கணவரை தேர்வு செய்யும் வகையில் திருமண தகவல் மையத்தில் புகைப்படத்துடன் தனது விபரத்தை பதிவு செய்து வைத்திருந்தார்.

அந்த விபரங்களை பார்த்த வாலிபர் ஒருவர், கல்லூரி மாணவியை தொடர்பு கொண்டு தான் வெளிநாட்டில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றுவதாகவும், தங்களை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் கூறினார். மேலும், தனது அழகான மாடலிங் செய்யும் புகைப்படத்தையும் அனுப்பி வைத்துள்ளார்.

ரூ.3¼ லட்சம் பணம் பறிப்பு

இதை பார்த்து மயங்கிய மாணவி, அந்த வாலிபருடன் செல்போனில் பேசி உள்ளார். கல்லூரி மாணவியிடம் காதல் வசனங்கள் பேசிய வாலிபர், அவரிடம் இருந்து பல்வேறு கட்டமாக ரூ.3 லட்சத்து 36 ஆயிரம் பெற்றுள்ளார். கல்லூரி மாணவியும் தான் ஏமாற்றப்படுவதை அறியாமல் தனது வருங்கால கணவர் தானே என வாலிபர் கேட்ட போதெல்லாம் பணம் அனுப்பி உள்ளார்.

ஒரு கட்டத்தில் அந்த வாலிபர் மீது மாணவிக்கு சந்தேகம் ஏற்பட்டது. அப்போது தான் அவர், தன்னிடம் அந்த வாலிபர் நயவஞ்சமாக காதல் மொழி பேசி தன்னை ஏமாற்றி வருவது தெரியவந்தது.

இதுகுறித்து அவர், சென்னை கிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பத்மகுமாரி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.

கைது

விசாரணையில், கல்லூரி மாணவியை ஏமாற்றியது தெலுங்கானாவைச் சேர்ந்த மணிகண்ட சாய் (வயது 23) என்பது தெரியவந்தது. மேலும் அந்த வாலிபர், வெளிநாட்டில் இருப்பது போல் மாடலிங் தொழில் செய்யும் ஒரு வாலிபரின் புகைப்படத்தை தனது புகைப்படம் என கல்லூரி மாணவிக்கு அனுப்பி அவரை ஏமாற்றி பணம் பறித்ததும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து மணிகண்ட சாயை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்