பெண் அழகுக்கலை நிபுணரை மிரட்டி ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் பறிப்பு

செல்போன் செயலியில் பதிவேற்றம் செய்த புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து பெண் அழகுக்கலை நிபுணரை மிரட்டி ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் பறித்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2023-03-11 19:39 GMT

செல்போன் செயலியில் பதிவேற்றம் செய்த புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து பெண் அழகுக்கலை நிபுணரை மிரட்டி ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் பறித்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

செல்போன் செயலி மூலம் கடன்

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை சேர்ந்த 30 வயது பெண் அழகுக்கலை நிபுணருக்கு படித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார். இவர் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தி வந்துள்ளார். அப்போது விளம்பரத்தில் வந்த பைசாஹோம், எம்பி லோன், கிரெடிட் பார்க், போன்ற கடன் வழங்கும் செல்போன் செயலிகளை பதவிறக்கம் செய்தார்.

பின்னர், கடன் பெறுவதற்காக தனது புகைப்படம், செல்போன் எண் மற்றும் விவரங்களை அந்த செயலிகளில் பதிவு செய்துள்ளார். இதைத்தொடர்ந்து செல்போன் செயலி மூலம் ரூ.10 ஆயிரம் கடன் பெற்ற அவர் அந்த தொகையை முறையாக திருப்பி செலுத்தியுள்ளார். அந்த நேரத்தில் சில வெளிநாட்டு செல்போன் எண்களில் இருந்து, அந்த பெண்ணின் வாட்ஸ்-அப் எண்ணுக்கு மெசேஜ் வந்துள்ளது.

ஆபாசமாக சித்தரித்து மிரட்டல்

அதில், கடன் வழங்கும் செயலியில் அந்த பெண் பதிவேற்றம் செய்த புகைப்படத்தை எடுத்து ஆபாசமாக சித்தரித்து அனுப்பி இருந்தனர். அத்துடன் அந்த படத்தை மேலும் மற்றவர்களுக்கு பகிராமல் இருக்க உடனடியாக தாங்கள் கேட்கும் பணத்தை அனுப்பும்படி கூறினார்.

இதைத்தொடர்ந்து அவர்கள் கேட்டபடி, அந்த பெண் ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்து 560-ஐ அவர்கள் குறிப்பிட்ட வங்கி கணக்குகளுக்கு பிரித்து அனுப்பியுள்ளார். இதற்கிடையே அந்த பெண் தனது செல்போனில் அடிக்கடி பேசிவந்த நபர்களில் 7 பேரின் செல்போனுக்கும் ஆபாசமாக சித்தரிக்கப்பட்ட படத்தை அனுப்பியதுடன் மேலும் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

ரூ.1¾ லட்சம் பறிப்பு

அந்த பெண் வாங்கிய கடனோ ரூ.10 ஆயிரம் தான். ஆனால் அவரிடம் பறிக்கப்பட்டதோ ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்து 560. வாங்கிய கடனை விட கூடுதலாக பணத்தை இழந்ததால், மனமுடைந்த அந்த பெண், இதுபற்றி திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) லதா தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும், போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) லதா கூறும்போது, பெண்கள் தங்களின் தகவல்களை, குறிப்பாக புகைப்படங்களை சமூகவலைதளத்தில் பதிவேற்றம் செய்வதை தவிர்க்க வேண்டும். இதுபோன்ற சித்தரிக்கப்பட்ட புகைப்படங்களை அனுப்பி மிரட்டினால் உடனடியாக போலீசாரிடம் தெரிவிக்க வேண்டும். அவர்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட மாட்டாது. ரிசர்வ் வங்கி அனுமதி இல்லாமல் இதுபோன்ற செயலிகள் உருவாக்கப்பட்டு ஏமாற்று பேர்வழிகள் அப்பாவி மக்களை ஏமாற்றுகின்றனர். குற்றவாளிகள் குறித்து துப்பு துலக்கிவருகிறோம். பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்