பெண்ணிடம் ரூ.10 லட்சம் பறிப்பு

தர்மபுரியில் 5 மடங்கு பணம் தருவதாக கூறி கரூரைச் சேர்ந்த பெண்ணிடம் ரூ.10 லட்சத்தை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.;

Update: 2023-05-23 05:30 GMT

தர்மபுரியில் 5 மடங்கு பணம் தருவதாக கூறி கரூரைச் சேர்ந்த பெண்ணிடம் ரூ.10 லட்சத்தை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

5 மடங்கு பணம்

கரூர் மாவட்டம் தாந்தோணிமலை பகுதி சேர்ந்தவர் வனிதா (வயது 52). இவரது செல்போனுக்கு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர்கள் ரூ.10 லட்சம் கொடுத்தால் 5 மடங்கு கூடுதலாக பணம் தருவதாக ஆசை வார்த்தைகளை கூறியுள்ளனர். இதை நம்பி வனிதா பணத்தை எங்கே கொண்டு வர வேண்டும் என்று செல்போனில் பேசிய நபர்களிடம் கேட்டு உள்ளார்.

அப்போது தர்மபுரி உழவர் சந்தை எதிரே உள்ள அரசு போக்குவரத்து கழக டெப்போ முன்பு பணத்தை கொண்டு வருமாறு அந்த நபர்கள் கூறியுள்ளனர். ரூ.10 லட்சம் கொடுத்தால் உடனடியாக ரூ.50 லட்சம் கொடுக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பணம் பறிப்பு

இதையடுத்து கடந்த 4 நாட்களுக்கு முன்பு வனிதா ரூ.10 லட்சத்துடன் தர்மபுரிக்கு வந்துள்ளார். அந்த நபர்கள் கூறியபடி அரசு போக்குவரத்து கழக டெப்போ முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது 2 கார்களில் அங்கு வந்த 7 பேர் வனிதாவிடம் பேசி உள்ளனர். அப்போது வனிதாவிடம் இருந்து பணப்பையை பறித்துக்கொண்டு அவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் கார்களில் ஏறி சென்று விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த வனிதா அந்த நபர்களை செல்போனில் தொடர்பு கொண்டார். அப்போது அந்த செல்போன் எண்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வனிதா இது பற்றி தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை பறித்து சென்ற நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்