தனியார் நிறுவன ஊழியரை மிரட்டி பணம் பறிப்பு

கிருஷ்ணகிரியில் தனியார் நிறுவன ஊழியரை மிரட்டி பணம் பறித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-08-12 18:02 GMT

கிருஷ்ணகிரியில் தனியார் நிறுவன ஊழியரை மிரட்டி பணம் பறித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

தனியார் நிறுவன ஊழியர்

தென்காசி மாவட்டம் பாலூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவ ஞானகுமார் (வயது 24). இவர் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பயிற்சி டிரைவராக பணியாற்றி வருகிறார். கடந்த 10-ந் தேதி இரவு இவர் ஆட்டோவை சோதனை ஓட்டமாக ஓட்டிகொண்டு கிருஷ்ணகிரிக்கு வந்தார்.

கிருஷ்ணகிரியில் கலெக்டர் அலுவலகம் அருகில் ஆட்டோவை திருப்பி மீண்டும் ஓசூர் நோக்கி செல்ல முயன்றார். அப்போது ஸ்கூட்டியில் 2 பேர் வந்து சிவஞானகுமாரை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டினர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பணம் இல்லை என்று கூறினார்.

மிரட்டல்

இதையடுத்து அவரை இருட்டான பகுதிக்கு அழைத்து சென்று பணம் கொடுத்தால் தான் விடுவோம் என்று மிரட்டினா். தொடர்ந்து சிவஞானகுமார் தனது அண்ணன், தம்பி ஆகியோரை தொடர்பு கொண்டு தனது கணக்கிற்கு பணம் அனுப்புமாறு கூறினார். இதையடுத்து அவர்கள் சிவஞானகுமாரின் கணக்கிற்கு ரூ.10 ஆயிரம் அனுப்பினர்.

இதைத் தொடர்ந்து அந்த நபர்கள் அவரை அழைத்து கொண்டு கிருஷ்ணகிரியில் சேலம் சாலையில், சென்னை பிரிவு சாலை அருகில் உள்ள ஒரு டீக்கடைக்கு சென்றனர். அந்த டீக்கடையின் உரிமையாளர் செல்போன் எண்ணிற்கு ரூ.9,200 தொகை அனுப்புமாறு அவர்கள் கூறினர். அந்த கும்பலிடம் இருந்து தப்பிய சிவ ஞானகுமார் இது தொடர்பாக கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் நேற்று புகார் செய்தார்.

2 பேர் கைது

அதன் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் கிருஷ்ணகிரி கட்டிகானப்பள்ளி சத்யசாய் நகரை சேர்ந்த வருண் (21), பூபதி, மாலிக், சூளகிரி அருகே சின்னாரை சேர்ந்த மோனிஷ் (24) ஆகியோர் பணம் பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வருண், மோனிஷ் ஆகிய 2 வாலிபர்களை கைது செய்தனர். பூபதி, மாலிக் ஆகிய 2 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்