சூரமங்கலம்:-
சென்னை-கோவை இடையே சேலம் வழியாக இயக்கப்படும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில்
சென்னை சென்ட்ரல்-கோவை இன்டர்சிட்டி (வண்டி எண்-12679) மற்றும் மறுமார்க்கத்தில் கோவை-சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-12680) தினசரி ரெயிலாக சேலம் வழியாக சோதனை அடிப்படையில் இயக்கப்பட்டு வந்தன. இந்த ரெயிலின் சேவை காலம் மறு அறிவிப்பு வரும் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும் இந்த ரெயில் கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி ரெயில் நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) முதல் நின்று செல்ல ரெயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
அதன்படி சென்னை சென்ட்ரல்-கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-12679) சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு மாலை 5.49 மணிக்கு சாமல் பட்டி ரெயில் நிலையம் வந்தடையும். பின்னர் இங்கிருந்து 5.50 மணிக்கு புறப்பட்டு சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக இரவு 10.15 கோவை சென்றடையும்.
மறுமார்க்கம்
இதேபோல் மறு மார்க்கத்தில் கோவை-சென்னை சென்ட்ரல் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-12680) கோவை ரெயில் நிலையத்தில் இருந்து காலை 6.15 மணிக்கு புறப்பட்டு திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக சாமல்பட்டி ரெயில் நிலையத்திற்கு காலை 9.54 மணிக்கு சென்றடையும்.
பின்னர் இங்கிருந்து 9.55 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.50 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் சென்றடையும். மேலும் இந்த ரெயில்கள் மறு அறிவிப்பு வரும் வரை இயக்கப்படும் என சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.