கோவில் நிலத்தை அபகரிப்பதை சகித்துக்கொள்ள முடியாது -ஐகோர்ட்டு கண்டனம்

கோவில் நிலத்தை அபகரிக்கும் முயற்சியை சகித்துக்கொள்ள முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.

Update: 2023-05-12 23:43 GMT

சென்னை,

காஞ்சீபுரம் மாவட்டம் கோவூரில் உள்ள சுந்தரேஸ்வர சுவாமி கோவிலுக்கு சொந்தமான விவசாய நிலங்களை, கோவூர் வேளாண் கூட்டுறவு சங்கம் குத்தகைக்கு எடுத்தது. பின்னர், சங்கத்தின் உறுப்பினர்கள் விவசாயம் செய்வதற்காக நிலத்தை பகிர்ந்து வழங்கியது.

ஆனால், குத்தகை தொகையை வழங்காததால், நிலத்தை காலி செய்து கோவில் வசம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் சிலர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

ரூ.50 லட்சம் பாக்கி

கோவில் நிர்வாகம் தரப்பில் தங்களுக்கும், கூட்டுறவு சங்கத்திற்கும் மட்டுமே ஒப்பந்தம் போடப்பட்டதாகவும், வழக்கு தொடர்ந்துள்ள உறுப்பினர்களுக்கும், தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த வழக்கை தொடர அவர்களுக்கு உரிமை இல்லை என்று வாதிடப்பட்டது.

மேலும், ரூ.50 லட்சம் ரூபாய் அளவிற்கு குத்தகை பாக்கி நிலுவையில் வைத்துள்ளதாகவும், விவசாயத்திற்கு கொடுத்த நிலத்தை வணிக நோக்கத்திற்காக பயன்படுத்துவதாகவும் கோவில் நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டது.

இதை ஏற்றுக்கொள்கிறேன். கோவில் நிர்வாகத்துக்கும், கூட்டுறவு சங்கத்துக்கும் இடையேதான் குத்தகை ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. ஒப்பந்தம் எதுவும் செய்யாமல், கோவில் நிலத்தை வர்த்தக ரீதியாக பயன்படுத்தி உள்ளனர்.

வெளியேற்ற வேண்டும்

இந்த வழக்கு 10 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் இருந்துள்ளது. அப்போது கூட குத்தகை தொகையை வழங்கவில்லை. கோவில் நிலத்தை அபகரிக்கும் எந்த ஒரு முயற்சியையும் சகித்துக்கொள்ள முடியாது. கோவிலுக்கு மனுதாரர்களால் பெருத்த வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே, நிலத்தில் இருந்து அனைவரையும் வெளியேற்றி, நிலத்தை கோவில் நிர்வாகத்திடம் காஞ்சீபுரம் கலெக்டர் ஒப்படைக்க வேண்டும். குத்தகை பாக்கித்தொகையை வசூலிக்க கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் உள்ளிட்ட அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்