சிற்பங்கள் நிறைந்த கல் தூண் மண்டபத்தில் ஆய்வு

ராஜபாளையம் அருகே சிற்பங்கள் நிறைந்த கல் தூண் மண்டபத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

Update: 2023-04-07 19:40 GMT

ராஜபாளையம்,

ராஜபாளையம் அருகே சிற்பங்கள் நிறைந்த கல் தூண் மண்டபத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கல் தூண் மண்டபம்

ராஜபாளையத்தில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் சாலையில் காயல்குடி ஆற்றுப்பாலத்தின் ஓரத்தில் ஒரு கல் தூண் மண்டபம் உள்ளது. ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரி வரலாற்றுத்துறை உதவி பேராசிரியர் கந்தசாமி தலைமையில் கல்லூரியின் கலாச்சார பாரம்பரிய கழக மாணவ,மாணவிகள் ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.

முன்னாள் தாசில்தார் ஆதிநாராயணன், மகாத்மா காந்தி கல்லூரி முதல்வர் அழகர் மற்றும் செங்கல்வராயன் ஆகியோர் கொடுத்த தகவலின் படி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து பேராசிரியர் கந்தசாமி கூறியதாவது:- இங்குள்ள கல் மண்டப தூண்கள் மிக நேர்த்தியாக சிற்பக்கலை அடிப்படையில் செதுக்கப்பட்டுள்ளது.

12 ராசிகள்

கல்தூண் மண்டபத்தினுள் கற்களால் கட்டப்பட்ட கருவறை போன்ற அமைப்புடைய ஒரு அறையும் காணப்படுகிறது. உள்ளே உள்ள பீடத்தில் சிவலிங்கம் வைத்து வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. கருவறை, அர்த்தமண்டபம், முகமண்டபம் போன்ற 3 கட்ட அமைப்பில் காணப்படுகிறது.

முன் மண்டபத்தில் 8 கல் தூண்களும், அர்த்த மண்டபத்தில் 6 கல் தூண்களும் உள்ளன. அனைத்து தூண்களிலும் நாகப்பந்தம் காணப்படுகிறது. இதில் 12 ராசிகளுக்கான உருவங்களை சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பல்வேறு சிற்பங்கள் அடங்கிய சிற்பக்கூடமாக காட்சியளிக்கிறது.

தியான மண்டபம்

கல் மண்டபத்தை ஒட்டி மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து வரும் நீரோட்டம் காயல்குடி ஆறாக பாய்ந்த தடம் இன்றும் காணப்படுகிறது. 2 கி.மீ. சுற்றளவில் உள்ள பெத்தவநல்லூர் மாயூரநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. காயல்குடி ஆற்றையொட்டி கல் தூண் மண்டபக் கோவில் அமைந்துள்ளதால் அருகில் உள்ள கோவிலில் நடக்கும் திருவிழாவின் போது சுவாமி திருவீதி உலா வந்து காயல் குடி ஆற்றில் நீராடி இந்த கல் மண்டபத்தில் தங்கி பூஜை செய்யப்பட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது.

அதோடு இந்த வழியில் செல்லும் மக்கள் தங்கும் அன்ன சத்திரமாகவும், வழிபாட்டு தியான மண்டபமாகவும் இருந்திருக்கலாம். கல் மண்டபத்தின் அமைப்பை கொண்டு 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்