குட்டப்பாளையம் சேனாபதி காங்கயம் கால்நடை ஆராய்ச்சி மையத்தில் முன்னாள் மத்திய மந்திரிப.சிதம்பரம் எம்.பி. காங்கயம் காளையை நேரில் பார்வையிட்டார்.
காங்கயம் காளைகள்
காங்கயம் தாலுகா, நத்தக்காடையூர் அருகே உள்ள பழையகோட்டை ஊராட்சி குட்டப்பாளையம் கிராமத்தில் சேனாபதி காங்கயம் கால்நடை ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு காங்கயம் இன கால்நடை பாதுகாப்புக்கான பணிகள், வனம் மற்றும் ஆராய்ச்சி மையம், கிராமங்களில் நாட்டு மாடுகள் வளர்ப்பு, இயற்கை வேளாண்மை, பாரம்பரிய உயரிய பண்பாடு மரபுகள், நீர் ஆதாரங்களின் மேம்பாடு, மழைநீர் சேகரிப்பு, குட்டை அமைத்தல், குறுங்காடுகள் வளர்ப்பு, மரம் நடுதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு கால்நடை பராமரிப்பு பணிகள் ஆகியவை நடைபெற்று வருகின்றன.
இந்த மையத்திற்கு முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் எம்.பி., நேற்று வந்தார். அவரை சேனாபதி காங்கயம் கால்நடை ஆராய்ச்சி மைய தலைவர் கே.எஸ்.சிவசேனாபதி, நிர்வாக இயக்குனர், தி.மு.க. சுற்றுச்சூழல் அணி மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி, அறங்காவலர் அரவிந்த் நல்லதம்பி ஆகியோர் வரவேற்றனர்.
பார்வையிட்டார்
பின்னர் உலகிலேயே வீரத்திற்கும், கம்பீரத்திற்கும் புகழ்பெற்ற காங்கயம் இன கால்நடைகளான மயிலை, செவலை, பசு மாடுகள், காளைகள், கன்றுகள் கிராம பகுதிகளில் வளர்க்கப்பட்டு வரும் விதங்கள், காங்கயம் காளைகளின் நோய் எதிர்ப்பு சக்தி திறன்கள், அதிக பாரத்தை இழுக்கும் திறன் மேம்பாடுகள், ரேக்ளா பந்தயம், ஜல்லிக்கட்டு வீர விளையாட்டுகளில் காங்கயம் காளைகள், காளைகளின் திமில், காங்கயம் இன கால்நடைகள் விரும்பி உண்ணும் கொழுக்கட்டை புல் வளர்ந்து உள்ள கொரங்காடுகள், இயற்கை பாரம்பரிய முறையில் விவசாயம் சார்ந்த பணிகள் ஆகியவை பற்றி விரிவாக விளக்கி கூறினார்கள்.
தொடர்ந்து சேனாபதி காங்கயம் கால்நடை ஆராய்ச்சி மையத்தில் அமைக்கப்பட்டுள்ள கால்நடை அருங்காட்சியகம், நூலகம் ஆகியவற்றினை ப.சிதம்பரம் பார்வையிட்டார்.