ஊட்டச்சத்து மிக்க பொருட்கள் குறித்த கண்காட்சி

ஊட்டச்சத்து மிக்க பொருட்கள் குறித்த கண்காட்சி நடைபெற்றது.

Update: 2022-09-02 18:22 GMT

பெரம்பலூர் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் மூலம் ரத்த சோகை விழிப்புணர்வு பிரசார வாகனம் தொடக்க விழா கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது. இதில் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா கலந்து கொண்டு ரத்த சோகை விழிப்புணர்வு பிரசார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து அவர் தேசிய ஊட்டச்சத்து மாத திருவிழாவை முன்னிட்டு "ஊராட்சிகளில் ஊட்டச்சத்தை மேம்படுத்துதல்" என்ற கருப்பொருளை மையமாக கொண்ட கையெழுத்து இயக்கத்தினை கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். மேலும் அவர் பெண்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய சத்தான உணவு வகைகள் குறித்து அமைக்கப்பட்டிருந்த ஊட்டச்சத்து மிக்க பொருட்கள் அடங்கிய கண்காட்சியினை பார்வையிட்டார்.

அப்போது கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா கூறுகையில், செப்டம்பர், அக்டோபர், நவம்பர் ஆகிய 3 மாதங்களுக்கு ரத்த சோகை விழிப்புணர்வு பிரசார வாகனம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்து வீடுகளுக்கும் குழந்தை வளர்ச்சி திட்ட பணியாளர்கள், களப்பணியாளர்கள் நேரில் சென்று கணக்கெடுத்து ஊட்டச்சத்து குறைபாடு உள்ள பெண்களை கண்டறிந்து, அவர்களுக்கு தேவையான அறிவுரைகளை வழங்கி ஊட்டச்சத்து மிக்க பொருட்களை வழங்குவார்கள். ஊட்டச்சத்து குறைபாடு, ரத்த சோகை உள்ளிட்ட பல்வேறு சத்து குறைபாடுகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தெருக்கூத்து, பொம்மலாட்டம் போன்ற பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது, என்றார். இதில் மாவட்ட திட்ட அலுவலர் சுகந்தி, ஒருங்கிணைப்பாளர் சவுந்தரவள்ளி, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்