தொல்லியல் சின்னங்கள் குறித்த கண்காட்சி

ஊட்டியில் தொல்லியல் சின்னங்கள் குறித்த கண்காட்சியை சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர்.

Update: 2023-05-18 20:00 GMT

ஊட்டி

ஊட்டியில் தொல்லியல் சின்னங்கள் குறித்த கண்காட்சியை சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர்.

தொல்லியல் சின்னங்கள்

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கோவை மாவட்ட கலெக்டராக இருந்த ஜான் சல்லிவன் 1819-ம் ஆண்டு ஊட்டியை கண்டறிந்தார். இதையடுத்து தனது அயராத முயற்சியால் 1822-ம் ஆண்டு ஊட்டியை உருவாக்கி வெளி உலகத்திற்கு அறிமுகப்படுத்தினார். ஊட்டி நகரம் உருவாகி 200-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி சுற்றுலாவை மேம்படுத்தவும், பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தவும் தமிழக அரசு ரூ.10 கோடி நிதி ஒதுக்கியது.

இதன்படி கோடை சீசனையொட்டி கடந்த 6-ந் தேதி முதல் காய்கறி கண்காட்சி, வாசனை திரவிய கண்காட்சி, படகு போட்டி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. இந்தநிலையில் ஊட்டி 200-வது ஆண்டு விழா மற்றும் உலக அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு, நீலகிரி மலைகளின் தொல்லியல் சின்னங்கள் குறித்த சிறப்பு கண்காட்சி ஊட்டி அரசு அருங்காட்சியகத்தில் நடந்தது. இந்த கண்காட்சியை கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

பாறை ஓவியங்கள்

இதில் நீலகிரி மலைகளின் தொன்மையினை அறிந்துகொள்ளும் வகையில் வரலாற்றுக்கு முந்தைய காலத்திலும், மனிதர்கள் வாழ்ந்த இடங்களை எடுத்துரைக்கும் விதமாக நீலகிரி மாவட்டத்தில் பல இடங்களில் காணப்படும் சான்றுகளான வரலாற்றுக்கு முந்தைய கால பாறை ஓவியங்கள் மற்றும் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற் கால பண்பாட்டு நினைவு சின்னங்கள், அதுதொடர்பான ஆவணங்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது.

ஐரோப்பியர்கள் வருகைக்கு பிறகு நீலகிரியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வு இடங்கள், தொல்பொருட்கள் மற்றும் இதர வரலாற்று குறிப்புகள், வண்ண வரைபடங்கள், ஓவியங்கள் இடம்பெற்று உள்ளது. கண்காட்சியில் காட்சிப்படுத்த தொல்லியல் சின்னங்களை சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர்.

ஊட்டி அரசு அருங்காட்சியகத்தில் நீலகிரி வனவிலங்குகள், தோடர், இருளர் பழங்குடியின மக்களின் வாழ்வியல் பொருட்கள், படுகர் இன மக்களின் கலை பொருட்கள் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்