பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொன்மை பாதுகாப்பு மன்றம் மற்றும் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் சார்பாக கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் கருணாநிதி தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் ஜெகநாதன் கண்காட்சியை தொடங்கி வைத்தார். கண்காட்சியில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் பயன்படுத்திய பொருட்கள், பழங்கற்கால கருவிகள், முன் கற்கால கருவிகள், புதிய கற்கால கருவிகள், சோழர்கால நாணயங்கள், மக்கள் சீனாவோடு தொடர்பு கொண்டிருந்ததற்கான ஆதாரங்களான பீங்கான் ஓடுகள், தமிழ்நாட்டில் சிவகளையில் அகழாய்வு மூலம் கண்டெடுக்கப்பட்ட 3,200 ஆண்டுகளுக்கு முன்பு கிடைத்த நெல்மணிகள், வளையல்கள், கழுத்து மணி, நூல் நூற்கும் எந்திரம், மன்னர்கள் காலத்து நாணயங்கள், பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு கல்லாக மாறிய நத்தை, கல்லாக மாறிய மரம் ஆகியவை வைக்கப்பட்டு இருந்தன.
மாணவர்கள் வரிசையில் சென்று பழங்கால பொருட்கள் மற்றும் புகைப்பட கண்காட்சியை கண்டு ரசித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தொன்மை பாதுகாப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர் அன்புவேல் செய்திருந்தார்.