'தினசரி ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்தால் இதயத்தை பாதுகாக்கலாம்'-அரசு ஆஸ்பத்திரி டீன் பேச்சு
ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்தால் இதயத்தை பாதுகாக்கலாம் என அரசு ஆஸ்பத்திரியில் நடந்த நிகழ்ச்சியில் டீன் பேசினார்.;
ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்தால் இதயத்தை பாதுகாக்கலாம் என அரசு ஆஸ்பத்திரியில் நடந்த நிகழ்ச்சியில் டீன் பேசினார்.
உலக இதய தினம்
மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சார்பில் உலக இதய தினம் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி நேற்று காலையில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. அதன்பின்னர், ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள கருத்தரங்க அறையில் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. இருதயவியல் துறை தலைவர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார். இருதயவியல் துறையின் சாதனைகள் குறித்து, இணை பேராசிரியர் செல்வராணி பேசினார்.
அரசு ஆஸ்பத்திரி டீன் ரத்தினவேல் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக நகைச்சுவை நடிகர் மதுரை முத்து கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, இருதயவியல் துறையில் சிறப்பாக பணியாற்றிய டாக்டர்கள், செவிலியர்கள், ஆய்வக உதவியாளர்களுக்கு கேடயம், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இதனை தொடர்ந்து டீன் ரத்தினவேல் பேசுகையில், "மதுரை அரசு ஆஸ்பத்திரியின் இருதயத்துறை தென் தமிழகத்தில் சிறந்த துறையாக செயல்பட்டு வருகிறது. இதயம் சார்ந்த பிரச்சினைகளை குணப்படுத்தியதில் 85 சதவீதம் வெற்றி பெற்று தென் தமிழகத்தில் முதலிடத்தில் உள்ளது. மனித உடலில் முதலில் துடிக்க தொடங்கும் முதல் உறுப்பு இருதயம் தான்.
தினசரி உடற்பயிற்சி
நாங்கள் படிக்கும் காலத்தில் சைக்கிளில் சென்று தான் படித்தோம். ஆனால், இப்போது அப்படி கிடையாது. உடற்பயிற்சியானது, இப்போதுள்ள மக்களிடம் குறைந்து விட்டது. தினசரி ஒரு மணி நேரம் நடைபயிற்சி உள்ளிட்ட ஏதாவது ஒரு உடற்பயிற்சியை செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் இதயம் தொடர்பான பிரச்சினைகள் வராது என்றார்.
இந்த நிகழ்ச்சியில், மருத்துவ கல்லூரி துணை முதல்வர் தனலட்சுமி, மருத்துவ கண்காணிப்பாளர் விஜயராகவன், மருத்துவ இருப்பிட அதிகாரிகள் ரவீந்திரன், ஸ்ரீலதா, இருதயத்துறை பேராசிரியர்கள், முதுநிலை மாணவர்கள், செவிலியர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.