பெரியதாழையில் சிலம்பம் சுற்றும் பயிற்சி
பெரியதாழையில் சிலம்பம் சுற்றும் பயிற்சி நடந்தது.
சாத்தான்குளம்:
கிராமிய கலையான சிலம்பம் அனைத்து கிராம மக்களையும் கவரும் வகையிலும், ஊக்கு விக்கும் பொருட்டு பெரியதாழை புனித அருளப்பர் முடியப்பர் ஆலய வளாகத்தில் 12 மணி நேரம் சிலம்பம் சுற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 7 வயது முதல் 14 வயதுள்ள பள்ளி மாணவர்கள் 107 பேர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியை ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். பெரியதாழை பங்குதந்தை சுசீலன் முன்னிலை வகித்தார். மலர்விழி வரவேற்றார். இதில் 12 மணி நேரம் சிலம்பம் சுற்றி மாணவ, மாணவிகள் பாராட்டை பெற்றனர். தொடக்க நிகழ்வில் சிலம்பம் சுற்றிய அனைவருக்கும் எம்.எல்.ஏ. பரிசு வழங்கினார். கலையரங்கில் மாணவர்களின் நடன நிகழ்ச்சி நடந்து வந்தது.
மேலும், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் சித்தா அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடந்தது. விழாவுக்கு எம்.எல்.ஏ. தலைமை தாங்கி அடிக்கல் நாட்டினார். கருங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வி, பாக்கியலீலா, மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் பொற்செல்வன், நேர்முக உதவியாளர் மதுரம் பிரைட்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பின்னர் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் திருவரங்கப்பட்டி பெருமாள் கோவில் தெரு மற்றும் வேதக் கோவில் தெருக்களில் பேவர்பிளாக் சாலை அமைக்கும் பணிகளை எம்.எல்.ஏ. தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் ராஜசெல்வி, வட்டார மருத்துவ அலுவலர் சுந்தரி, மேற்பார்வையாளர் முத்துக்குமார் வெங்கடேசன், வல்லநாடு சித்த மருத்துவர் செல்வ குமார், கருங்குளம் சித்த மருத்துவர் ரதிசெல்வம் மற்றும் பணியாளர்கள், செவிலியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.