அதிகாலை பொழுதில் உற்சாக பயணம்: சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் சைக்கிள் போட்டி

கிழக்கு கடற்கரை சாலையில் நடந்த சைக்கிள் போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

Update: 2023-10-15 23:56 GMT

சென்னை,

சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானத்தூர் ரெட்டிக்குப்பத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், எச்.சி.எல். நிறுவனம் மற்றும் இந்திய சைக்கிள் ஓட்டுதல் சம்மேளனம் இணைந்து சைக்கிள் போட்டியை நேற்று நடத்தியது. அதிகாலை 5 மணிக்கு நடந்த இந்த போட்டியை விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கிவைத்தார். அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலை வகித்தார்.

இந்த போட்டி 55 கி.மீட்டர், 23 கி.மீட்டர் மற்றும் 15 கி.மீட்டர் ஆகிய 3 பிரிவுகளில் நடைபெற்றது. இதில் 1,125 (956 ஆண்கள் மற்றும் 169 பெண்கள்) வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். கோவளம், வட நெம்மேலி, பூஞ்சேரி ஆகிய பகுதிகளில் சைக்கிள் போட்டிக்கான சுற்றுப்பாதை அமைக்கப்பட்டிருந்தது. சைக்கிள் போட்டி நடந்த பகுதியில் போலீசார் பாதுகாப்பு அளித்தனர்.

உற்சாகமான பயணம்

போட்டியின் அளவீடுகள் நிர்ணயிக்கப்பட்ட 3 பகுதிகளில் டிஜிட்டல் டயர் பதிவு கருவிகளை கொண்டு கண்காணிக்கப்பட்டது. போட்டிக்காக கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் வரக்கூடிய வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பிவிடப்பட்டது. புதுச்சேரியில் இருந்து சென்னை வந்த வாகனங்கள் வெங்கம்பாக்கத்தில் இருந்து செங்கல்பட்டு வழியாக திருப்பி விடப்பட்டது.

கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து புதுச்சேரி செல்லும் வாகனங்கள் சோழிங்கநல்லூர் வழியாக ஓ.எம்.ஆர். சாலை வழியாக அனுமதிக்கப்பட்டது. போக்குவரத்து வேறு பாதையில் மாற்றி விடப்பட்டு இருந்ததால் சைக்கிள் போட்டியில் பங்கேற்றவர்கள் அதிகாலை பொழுதில் சைக்கிள்களை உற்சாமாக ஓட்டிச்சென்றனர். அவர்களுக்கு பின்னால் மருத்துவ பிரிவினர், சைக்கிள் பழுது பார்க்கும் ஊழியர்கள் கொண்ட குழுவினர் மோட்டார் சைக்கிள்களில் பின் தொடர்ந்தனர்.

இந்த சைக்கிள் பேரணியில் வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த பெண்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு சைக்கிள் ஓட்டி சென்ற காட்சிகளை காண முடிந்தது.

ரூ.30 லட்சம் பரிசுத்தொகை

தொழில் முறை மற்றும் அமெச்சூர் ஆகிய இருபிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசுத்தொகை வழங்கினார். இந்த போட்டியில் வெற்றி பெற்ற தொழில் வல்லுனர்கள், அமெச்சூர்களுக்கு தலாரூ.15 லட்சம் என ரூ.30 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்யா மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், தாம்பரம் போலீஸ் துணை கமிஷனர் பவன்குமார் ரெட்டி, இணை கமிஷனர் மூர்த்தி, எச்.சி.எல். நிறுவனத் தலைவர் சுந்தர் மகாலிங்கம், ஆசிய சைக்கிள் ஓட்டுதல் கூட்டமைப்பு தலைவர் ஓன்கர் சிங் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்