கீழடியில் சரியான இடத்தில்தான் அகழாய்வு நடந்து வருகிறது

கீழடியில் சரியான இடத்தில்தான் அகழாய்வு நடத்தப்பட்டுள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

Update: 2022-08-14 18:40 GMT

கீழடியில் சரியான இடத்தில்தான் அகழாய்வு நடத்தப்பட்டுள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

அகழாய்வு

விருதுநகர் அருகே மல்லாங்கிணற்றில் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:-

கீழடியில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் அகழாய்வு நடைபெற்று வருகிறது. இதில் 4-வது கட்டப்பணி முதல் 8-வது கட்டப்பணி வரை நடைபெற்றுள்ளது. பல்வேறு முக்கிய தகவல்கள் கிடைக்க பெற்றுள்ளது. குறிப்பாக சுடு மண் உறை கிணறுகள், கூரை வீடுகளில் சமுதாயம் வாழ்ந்ததற்கான கூரை வீட்டு ஓடுகள், தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் ஆகியவை கிடைக்க பெற்றுள்ளன. இவற்றை கரிமப்பகுப்பாய்வு செய்தபோது கீழடி நாகரிகம் என்பது 6-ம் நூற்றாண்டை சேர்ந்தது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபணமாகி உள்ளது.

தவறான குற்றச்சாட்டு

இதன் மூலம் எழுத்தறிவு பெற்ற ஒரு நாகரிகம் இருந்தது நிரூபணம் ஆகி உள்ளது. இங்கு கிடைத்த தொல்பொருள் பற்றிய ஆய்வு பல்வேறு பல்கலைக்கழகங்களிலும், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களிலும் நடத்தப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை 11 ஆயிரம் தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. இந்திய புவிகாந்தவியல் நிபுணர்கள் மூலம் இடம் தேர்வு செய்யப்பட்டு அகழாய்வு நடத்தப்பட்டுள்ளது. கீழடி அகழாய்வு சரியான இடத்தில், சரியான வகையில் நடைபெறவில்லை என்பது தவறான குற்றச்சாட்டாகும்.

அருங்காட்சியகம்

அங்கு சரியான இடத்தில் சரியான வகையில் அறிவியல் பூர்வமாக அகழாய்வு நடத்தப்பட்டதால் தான் 11 ஆயிரம் தொல்பொருள் கிடைத்துள்ளது.

அங்கு கிடைத்த தொல்பொருட்களை காட்சிப்படுத்த அருங்காட்சியகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்