அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ குழுவினர் ஆய்வு

தேசிய தர சான்று பெறுவதற்கு விண்ணப்பித்த பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

Update: 2022-09-22 18:45 GMT

பொள்ளாச்சி, 

தேசிய தர சான்று பெறுவதற்கு விண்ணப்பித்த பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

மருத்துவ குழுவினர் ஆய்வு

பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கடந்த 2018-ம் ஆண்டு தேசிய தர சான்று வழங்கப்பட்டது. அதன்படி ஒரு படுக்கைக்கு ரூ.10 ஆயிரம் வீதம் கடந்த 3 ஆண்டுகளாக நிதி வந்தது. இந்தநிலையில் தேசிய தர சான்றுக்கு மீண்டும் விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது. இதைதொடர்ந்து முதற்கட்டமாக மாநில அளவிலான மருத்துவ குழுவை சேர்ந்த தர்மபுரி மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் (பொறுப்பு) டாக்டர் ராஜேஸ்கண்ணா, நாமக்கல் தேசிய சுகாதார இயக்க அலுவலர் டாக்டர் ஜெயந்தி, மத்திய தர சான்று குழுவை சேர்ந்த செவிலியர் வாசுகி ஆகியோர் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு மேற்கொண்டனர்.

நோயாளிகளிடம் உடல் நலம் குறித்தும், ஆஸ்பத்திரியில் அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் விசாரித்தனர். அப்போது வார்டில் உள்ள டாக்டர்கள், செவிலியர்களிடமும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தனர். ஆய்வின் போது கோவை மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குனர் (பொறுப்பு) டாக்டர் ராஜா, டாக்டர்கள் உடனிருந்தனர்.

தேசிய தர சான்று

மேலும் தேசிய தர சான்று பெறுவதற்கு ஆஸ்பத்திரியில் மேற்கொள்ள வேண்டிய வசதிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதுகுறித்து இணை இயக்குனர் (பொறுப்பு) ராஜா கூறியதாவது:-

மாநில தர சான்று மற்றும் சுத்தம், சுகாதாரத்துக்கு 70 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாவட்ட தலைமை மருத்துவமனைகள், தாலுகாவில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள் தேசிய தர சான்றுக்கு தகுதி பெற்று உள்ளன.

அதன்படி பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. ஆஸ்பத்திரியில் 3 நாட்களில் பிரசவம், குழந்தைகள், வெளிநோயாளிகள், உள்நோயாளிகள், அவசர சிகிச்சை, அறுவை சிகிச்சை அரங்கு, ஆய்வகம், குடும்ப நலம் உள்பட 20 பிரிவுகளில் ஆய்வு நடத்தப்படும்.

ரூ.10 ஆயிரம் நிதி

ஆய்வில் கண்டறியப்படும் குறைகள் குறித்து தெரிவிக்கப்பட்டு, அவற்றை நிவர்த்தி செய்வதற்கு காலஅவகாசம் வழங்கப்படும். அதன்பின்னர் டெல்லி மருத்துவ குழுவினர் ஆய்வு செய்து விட்டு, தேசிய தர சான்று வழங்குவது குறித்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வார்கள். பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் 462 படுக்கை வசதி உள்ளது. தேசிய தர சான்று கிடைத்தால் ஒரு படுக்கைக்கு ரூ.10 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். தொடர்ந்து 3 ஆண்டுகள் இந்த நிதியை பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்