நெல்லை-தென்காசி மின்பாதையில் ரெயில்வே அதிகாரிகள் ஆய்வு
நெல்லை-தென்காசி மின்பாதையில் ரெயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
நெல்லை-தென்காசி மின்பாதையில் ரெயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
நெல்லை -தென்காசி மின்பாதை
மதுரை ரெயில்வே கோட்டத்தில் உள்ள அனைத்து ரெயில் பாதைகளும் மின்மயமாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதாவது இனிமேல் அனைத்து ரெயில்களும் டீசல் என்ஜின்களுக்கு பதிலாக மின்சார என்ஜின்களை கொண்டு இயக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதில் நெல்லை-திருச்செந்தூர் இடையே மின்பாதை அமைக்கப்பட்டு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.
அதுபோல் நெல்லை-தென்காசி இடையே 72 கிலோ மீட்டர் தூரம் ரெயில் பாதை மின்மயமாக்கும் பணியும் முடிவடைந்துள்ளது. இந்த பாதையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரெயில் என்ஜினை இயக்கி சோதனை செய்யப்பட்டது.
ரெயில்வே அதிகாரிகள் ஆய்வு
இந்த நிலையில் தெற்கு ரெயில்வே முதன்மை தலைமை மின்பொறியாளர் ஏ.கே.சித்தார்த்தா, மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் ஆனந்த் மற்றும் மின்சார பிரிவு ஆய்வு குழுவினர், சிறப்பு ஆய்வு செய்யும் பெட்டிகள் கொண்ட ரெயிலில் நேற்று காலை நெல்லைக்கு வந்தனர்.
அந்த ரெயில் என்ஜினுக்கு மாலை அணிவிக்கப்பட்டு, சிறப்பு பூஜை செய்யப்பட்டது. காலை 9.30 மணி அளவில் இந்த ரெயில் நெல்லையில் இருந்து புறப்பட்டு சென்றது. செல்லும் வழியில் மின் ஒயர்கள் இணைப்பு, வீரவநல்லூர் ரெயில் நிலையத்தில் அமைக்கப்பட்டு உள்ள துணை மின்நிலையம், பேட்டை, மேட்டூரில் அமைக்கப்பட்டு உள்ள மின் கட்டுப்பாட்டு நிலையங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மேலும் வழியெங்கும் மின்சார ரெயில் தங்கு தடையின்றி சீராக இயங்குவதற்கு தேவையான பணிகள் செய்யப்பட்டு உள்ளதா? என்று மின்பொறியாளர்கள் குழு நவீன உபகரணங்களுடன் ஆய்வு செய்தனர்.
இதைதொடர்ந்து மின்சார என்ஜின் மற்றும் அதனுடன் 5 பெட்டிகள் இணைக்கப்பட்ட ரெயிலை அதிவேகமாக இயக்கி சோதனை செய்யப்பட்டது. இந்த ரெயில் தென்காசி சந்திப்பில் இருந்து மாலை 4 மணி அளவில் புறப்பட்டு, நெல்லைக்கு வந்து சேர்ந்தது.
விரைவில் மின்சார ரெயில்
இதுதொடர்பாக மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் ஆனந்த் கூறியதாவது:-
நெல்லை-தென்காசி இடையே 72 கிலோமீட்டர் ரெயில் பாதையில் மின்மயமாக்கல் சோதனை நடைபெற்று உள்ளது. மின்மயமாக்கல் விதிமுறைபடி பணிகள் நடைபெற்றுள்ளதா? என்பது தொடர்பாக முதன்மை தலைமை மின் பொறியாளர் ஆய்வு நடத்தி உள்ளார். இந்த வழித்தடத்தில் விரைவில் மின்சார என்ஜின் பொருத்தப்பட்ட ரெயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மதுரை கோட்டத்தில் விருதுநகரில் இருந்து தென்காசி வழியாக செங்கோட்டை வரை ெரயில் பாதை மின்மயமாக்கல் பணியும், செங்கோட்டையில் இருந்து பகவதிபுரம் வரை ரெயில் பாதை மின்மயமாக்கல் பணியும் நடந்து வருகிறது. இந்த பணிகள் இந்த மார்ச் மாதம் இறுதிக்குள் முடிவடைந்து விடும். அதை தொடர்ந்து ஆய்வு நடத்தி மின்சார ரெயில் இயக்க அனுமதி வழங்கப்படும்.
செங்கோட்டை -புனலூர்
செங்கோட்டையில் இருந்து புனலூர் வரை செல்லக்கூடிய ரெயில் பாதையானது தமிழ்நாடு -கேரளாவை இணைக்கும் மலைவழி ரெயில் பாதை ஆகும். இந்த பாதையில் குகைகள் மற்றும் அதிகமான பாலங்கள் இருப்பதால் பணிகளில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த பாதையில் மின்மயமாக்கல் பணி இந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் முடிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.