எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில், 91.79 சதவீதம் பேர் தேர்ச்சி
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில், 91.79 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று, 18-வது இடத்தை பிடித்தது மதுரை மாவட்டம்.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில், 91.79 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று, 18-வது இடத்தை பிடித்தது மதுரை மாவட்டம்.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள்
தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதற்காக பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டிருந்தது. அதுபோல், பள்ளிகளில் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மேலும், அந்தந்த பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள செல்போன் எண்ணுக்கும், தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய செல்போன் எண்ணுக்கும் எஸ்.எம்.எஸ். வழியாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டது. இதன் மூலம் நேற்று காலையில் அனைத்து மாணவ, மாணவிகளும் தங்களது மதிப்பெண்களை அறிந்து கொண்டனர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள 484 பள்ளிகளில் இருந்து மொத்தம் 38 ஆயிரத்து 63 மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை எழுதினர். இதில் 19 ஆயிரத்து 190 பேர் மாணவர்கள். 18 ஆயிரத்து 873 பேர் மாணவிகள். இதில் 16 ஆயிரத்து 982 மாணவர்களும், 17 ஆயிரத்து 957 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 34 ஆயிரத்து 939 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
18-வது இடம்
அதில், மாணவர்கள் 88.64 சதவீதமும், மாணவிகள் 95.14 சதவீதமும் தேர்ச்சி பெற்றனர். மாணவர்களை காட்டிலும் மாணவிகளே அதிக அளவு தேர்ச்சி பெற்று சாதனை புரிந்துள்ளனர். சாதனை படைத்த மாணவ-மாணவிகளை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்தினார்கள்.
மதுரை மாவட்டத்தை பொறுத்தவரையில், இது 91.79 சதவீத தேர்ச்சியாகும். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மதுரை மாவட்டம் 18-வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மதுரை மாவட்டம் 95.09 சதவீதம் பெற்று, 4-வது இடத்தை பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.கடந்த ஆண்டில் 4-வது இடத்தில்இருந்த மதுரை மாவட்டம் இந்த ஆண்டு 18-வது இடத்திற்கு தள்ளப்பட்டது கல்வியா ளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது,
100 சதவீதம் தேர்ச்சி
மாவட்டத்தில் உள்ள 24 அரசு பள்ளிகள் உள்பட 141 பள்ளிகள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. இதில், கணித பாடத்தில் 228 பேர், அறிவியல் பாடத்தில் 152 பேர், சமூக அறிவியல் பாடத்தில் 16 பேர் என மொத்தம் 396 பேர் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
அரசு பள்ளிகள் 86.82 சதவீதமும், ஆதிதிராவிடர் பள்ளிகள் 90.51 சதவீதமும், கள்ளர் பள்ளிகள் 94.61 சதவீதமும், மாநகராட்சி பள்ளிகள் 83.57 சதவீதமும், சமூக நலத்துறை பள்ளிகள் 100 சதவீதமும், அரசு உதவி பெறும் பள்ளிகள் 90.82 சதவீதமும், பகுதி நேர அரசு உதவி பெறும் பள்ளிகள் 93.86 சதவீதமும், அறநிலையத்துறை பள்ளிகள் 96.63 சதவீதமும், மெட்ரிக் பள்ளிகள் 97.54 சதவீதமும் பெற்றுள்ளன.