கூட்டுறவு நிறுவனங்களில் காலி பணியிடங்களுக்கு நேர்முக தேர்வு 15-ந் தேதி முதல் தொடங்குகிறது

Update: 2022-12-10 18:45 GMT

கூட்டுறவு சங்கங்களின் தர்மபுரி மண்டல இணைப்பதிவாளர் ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் தர்மபுரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு வகையான கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள 98 பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களிடம் இருந்து இணைய வழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகிற 15- ந்தேதி முதல் 30-ந ்தேதி வரை நேர்முக தேர்வு தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது.

இந்த நேர்முக தேர்வுக்கான அனுமதி சீட்டை https://www.drb dharmapuri.net என்ற இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அனுமதி சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் கண்டிப்பாக நேர்முக அனுமதி சீட்டினை விண்ணப்பதாரர் கொண்டு வந்தால் மட்டுமே நேர்முக தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார். மேலும் நேர்முக தேர்வுக்கு வரும்போது விண்ணப்பதாரர் ஏற்கனவே தனது விண்ணப்பத்தில் பதிவேற்றம் செய்துள்ள அதே புகைப்படத்தின் பாஸ்போர்ட் அளவிலான 2 போட்டோக்கள் மற்றும் அனைத்து மூல சான்றிதழ்கள், அவற்றின் 2 பிரதிகள் சுய கையொப்பம் இட்டு கொண்டு வர வேண்டும். இதில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் தர்மபுரி மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையத்தின் (04342) - 234141, 233803 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்