முன்னாள் ராணுவவீரரின் மனைவி படுகொலை

அலங்காநல்லூர் அருகே முன்னாள் ராணுவ வீரரின் மனைவி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-07-08 18:57 GMT

அலங்காநல்லூர்,


அலங்காநல்லூர் அருகே முன்னாள் ராணுவ வீரரின் மனைவி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

முன்னாள் ராணுவ வீரர்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள காந்திகிராமத்தை சேர்ந்தவர் பாண்டி (வயது 67). முன்னாள் ராணுவ வீரர். இவருடைய மனைவி காந்திமதி (62). இவர்களுக்கு குழந்தை இல்லை.

10 ஆண்டுகளுக்கு முன்பு பாண்டி இறந்து விட்டார். இதனால் அவரது ஓய்வூதிய தொகையை பெற்று காந்திமதி வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை வீட்டில் காந்திமதி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதைப்பார்த்த உறவினர்கள், அலங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர்கண்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

டி.ஐ.ஜி. நேரில் விசாரணை

மதுரை சரக போலீஸ் டி.ஐ.ஜி பொன்னி, மாவட்ட சூப்பிரண்டு சிவப்பிரசாத், துணை சூப்பிரண்டு பாலசுந்தரம் ஆகியோரும் நேரில் விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில், காந்திமதியின் கழுத்து பகுதியில் காயம் இருந்ததால் கழுத்தை நெரித்து அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என தெரிய வந்தது. மேலும் அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்கச்சங்கிலியையும், காதில் அணிந்திருந்த அரை பவுன் நகையும் காணவில்லை.

இதனால் நகைக்காக அவரை கொன்று இருக்கலாம் என விசாரணையில் தெரிய வந்தது.

2 பேர் கைது

இது குறித்து அலங்காநல்லூர் போலீசார் வழக்குபதிவு செய்து கொலையாளிகளை தீவிரமாக தேடினார்கள். பின்னர் இது தொடர்பாக முத்துராஜா(20), 16 வயது சிறுவன் ஆகிய 2 பேரை கொலை நடந்த 4 மணி நேரத்தில் தனிப்படை போலீசார் கைது செய்தனர். கைதான 2 பேரும் மது குடிப்பதற்காக வீட்டில் தனியாக இருந்த பெண்ணை தலையணையால் முகத்தை அமுக்கி கொலை செய்ததாக போலீசில் தெரிவித்தனர்.

இதையடுத்து இந்த தனிப்படை போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் பாராட்டினார்.

அலங்காநல்லூர் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த பெண் நகைக்காக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்