சொத்துகுவிப்பு வழக்கை ரத்து செய்ய கோரும் முன்னாள் அமைச்சர் வேலுமணியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

சொத்துகுவிப்பு வழக்கை ரத்து செய்ய கோரும் முன்னாள் அமைச்சர் வேலுமணியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2023-03-27 21:04 GMT

ஐகோர்ட்டு உத்தரவு

தன் மீதான சொத்துகுவிப்பு வழக்கை ரத்து செய்ய கோரி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட்டு கடந்த மாதம் விசாரித்தது. பின்னர் ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவில், கடந்த 2016, 2021-ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் வேலுமணி தாக்கல் செய்த சொத்து கணக்குகளின் அடிப்படையில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், இந்த சொத்துகளுக்கு அவரிடம் விளக்கம் கேட்டபிறகுதான் வழக்குப் பதிவு செய்யமுடியும் என்கிற வாதத்தை ஏற்க இயலாது என்பதால், இவ்வழக்கில் தலையிட எவ்வித காரணமும் இல்லை என கூறி வழக்கை தள்ளுபடி செய்து கடந்த மாதம் 30-ந் தேதி உத்தரவிட்டது.

எஸ்.பி.வேலுமணி தரப்பு வாதம்

அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான அமர்வு விசாரித்தது.

எஸ்.பி.வேலுமணி அரசியல்வாதி என்பதால் குறிவைக்கப்படுவதாகவும், 2-வது முதல் தகவல் அறிக்கைக்கு அடிப்படையாக இருந்த முதல் தகவல் அறிக்கையை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்துவிட்டதாகவும், சொத்துகுவிப்பு மூன்று லட்சத்துக்கு உட்பட்டே இருப்பதாகவும் எஸ்.பி.வேலுமணி தரப்பில் மூத்த வக்கீல் சித்தார்த் தவே வாதிட்டார்.

மனுதாரர் அமைச்சராக இருந்தபோது அனைத்து ஒப்பந்தங்களையும் அவருடைய சகோதரர் பெற்றுள்ளபட்சத்தில் டெண்டர் முறைகேடு வழக்கை எப்படி ஐகோர்ட்டு ரத்து செய்ய முடியும் என தமிழ்நாடு அரசின் சார்பில் மூத்த வக்கீல் கபில் சிபல் வாதிட்டார்.

தள்ளுபடி

இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட சுப்ரீம் கோர்ட்டு, சொத்துகுவிப்பு வழக்கை ரத்து செய்ய கோரிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ததுடன், எஸ்.பி. வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு ரத்துக்கு எதிராக தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்தது.

Tags:    

மேலும் செய்திகள்