உடல் கருகி படுகாயமடைந்த முன்னாள் ராணுவ வீரர் சாவு
தஞ்சையில் குப்பைக்கிடங்கில் ஏற்பட்ட தீ பரவி 6 குடிசைகள் எரிந்து நாசமடைந்தன. இதில் உடல் கருகி படுகாயமடைந்த முன்னாள் ராணுவவீரர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
தஞ்சையில் குப்பைக்கிடங்கில் ஏற்பட்ட தீ பரவி 6 குடிசைகள் எரிந்து நாசமடைந்தன. இதில் உடல் கருகி படுகாயமடைந்த முன்னாள் ராணுவவீரர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
தீ விபத்து
தஞ்சை ஜெபமாலைபுரம் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பைக்கிடங்கு உள்ளது. இந்த குப்பைக்கிடங்கு 21 ஏக்கர் பரப்பளவு கொண்டது. மாநகரில் உள்ள 51 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் இந்த குப்பைக்கிடங்கில் கொண்டு வந்து கொட்டப்பட்டன. தற்போது குப்பைகள் கொட்டப்படுவது இல்லை. ஏற்கனவே கொட்டப்பட்ட குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு உரமாக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இந்த குப்பைக்கிடங்கில் திடீரென தீப்பிடித்தது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் குப்பைக்கிடங்கில் பிடித்த தீ வேகமாக பரவியதுடன், தீப்பொறி பறந்து வந்து குப்பைக்கிடங்கிற்கு அருகே உள்ள குடிசை வீடுகளில் விழுந்து பற்றி எரிந்தது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
முன்னாள் ராணுவவீரர் சாவு
இந்த விபத்தில் 6 குடிசை வீடுகள் எரிந்து சாம்பலானது. வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர். ஆனால் நடக்க முடியாத காரணத்தினால் குடிசை வீட்டில் இருந்து வெளியே வர முடியாததால் இந்த தீ விபத்தில் சிக்கி சீனிவாசபுரம் செக்கடி தெருவை சேர்ந்த முன்னாள் ராணுவவீரர் ஆரோக்கியசாமி (வயது72) படுகாயம் அடைந்தார்.
உடனே அவரை தீயணைப்பு வீரர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஆரோக்கியசாமி நேற்று காலை இறந்தார். இது குறித்து தஞ்சை மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.