தென்காசி கோவில் முன்னாள் ஊழியர்கள் காசிக்கு பயணம்
மத்திய அரசு செலவில் தென்காசி கோவில் முன்னாள் ஊழியர்கள் காசிக்கு புறப்பட்டனர்.
வாரணாசியில் சமீபத்தில் நடைபெற்ற தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோவில் குறித்து பிரதமர் மோடி பேசினார். இந்த நிலையில் இக்கோவிலில் பணியாற்றி ஓய்வு பெற்ற நாதஸ்வர கலைஞர் முத்துசாமி, கோவில் பணியாளர் கனகசபாபதி ஆகியோரை தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் கவுரவப்படுத்த மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் ஏற்பாடு செய்துள்ளார்.
அதன்படி ஓய்வு பெற்ற ஊழியர்கள் 2 பேர் மற்றும் அவர்களது மனைவிகளான மல்லிகா, கற்பகம் ஆகியோரை மத்திய அரசின் செலவில் காசிக்கு அழைத்துள்ளனர். அவர்களுக்கு தென்காசி காசி விஸ்வநாதர் சுவாமி கோவில் முன்பு வழியனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பா.ஜனதா கட்சியின் தொழில் பிரிவு மாநில செயலாளர் மகாதேவன், தென்காசி நகர தலைவர் மந்திரமூர்த்தி, மாவட்ட பொதுச் செயலாளர் ராமநாதன், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் கருப்பசாமி, மாவட்ட துணை தலைவர்கள் முத்துக்குமார், ராஜ்குமார், நகர்மன்ற உறுப்பினர்கள் சங்கர சுப்பிரமணியன், லட்சுமண பெருமாள் உட்பட பலர் கலந்துகொண்டு அவர்களை வழி அனுப்பி வைத்தனர்.